இந்தியா-ஓமன் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா-ஓமன் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மற்றும் ஓமன் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஓமன் நாட்டின் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே கடந்த டிசம்பர் 15ம் தேதி தகவல் தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர ஆதரவு, தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில்நுட்பங்கள், தகவல் மற்றும் முதலீடுகள் மூலம் இருதரப்பினருக்கும் இடையே விரிவான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருதரப்பினரும் கையெழுத்திட்ட நாளிலிருந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலுக்கு வருவதுடன், 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் ஜி2ஜி மற்றும் பி2பி இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.