ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புக்கு யூஜிசி அனுமதி
ஒரே நேரத்தில் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் இரண்டு பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது;
2022-23 ஆம் கல்வியாண்டு முதல், மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வெவ்வேறு பட்டப்படிப்புகளை படிப்பதற்கான புதிய முறையை பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
புதிய முறைக்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும். மாணவர்கள் பல்வேறு திறன்களை பெறுவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என யுஜிசி தலைவர் ஜகதேஷ் குமார் தெரிவித்தார்.
இந்த திட்டம் மூலம் மாணவர்கள் இளங்கலை, டிப்ளமோ மற்றும் முதுகலை நிலைகளில் இரண்டு பாடத்திட்டங்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்யலாம். இரண்டு பட்டங்களையும் நேரடியாக சென்று கற்கலாம் அல்லது ஒன்று ஆஃப்லைனிலும் மற்றொன்று ஆன்லைனிலும் கற்கலாம் அல்லது இரண்டு படிப்பையும் ஆஃப்லைனிலே கற்றுக்கொள்ளலாம்
ஒரு மாணவர் எந்த வகையான பாடத்திட்ட காம்பினேஷன்களை எடுக்கலாம்? இந்த திட்டம் நடைமுறைக்கு எவ்வளவு சாத்தியமானது?
கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைக்கு வெவ்வேறு அளவுகோல்களை வைத்துள்ளதால், அனுமதிக்கப்பட்ட பாடங்களின் சேர்க்கை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுபடும்.
உதாரணமாக, ஒரு மாணவர் ஏற்கனவே இளம் அறிவியல் கணிதப் பட்டப்படிப்பில் சேர்ந்திருக்கும் போது, வரலாற்றிலும் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர விரும்பினால், அவர் சேர அனுமதிக்கப்படுவார். ஒரு பல்கலைக்கழகம் மாலை ஷிப்டில் ஆஃப்லைனில் இளம்அறிவியல் திட்டத்தையும், காலை ஷிப்டில் முழுநேர இளங்கலை திட்டத்தையும் வழங்கினால், ஒரு மாணவர் இரண்டு திட்டங்களிலும் சேரலாம்.
புதிய நடைமுறையின்படி, ஒரு மாணவர் இரண்டு கல்வித் திட்டங்களைத் ஒரே நேரத்தில் பயில அனுமதிக்கிறது.
- ஒரு படிப்பை முழுநேர படிப்பாக நேரடியாகவும், மற்றொன்றை திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி திட்டம் மூலம் மேற்கொள்ளலாம்.
- ஒரு பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்பில் ஒரு படிப்பிற்கும், ஆப்லைன் முறையில் மற்றொரு படிப்பிலும் சேரலாம்.
- மூன்றாவது தேர்வு, அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களையும் ஆன்லைனிலே தொடரலாம்.
மாணவர்கள் இரண்டு படிப்பை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில், மாணவர்களும் கல்லூரிகளும் ஒரு திட்டத்திற்கான வகுப்பு நேரம், மற்றொன்றின் வகுப்பு நேரத்தின் போது இல்லாத வகையில் திட்டமிட வேண்டும்.
யூஜிசி மற்றும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே மாணவர்கள் தொலைதூர முறை/ஆன்லைன் முறையில் பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பை தொடர முடியும்.
இந்த திட்டம் எம்ஃபில் மற்றும் பிஎச்டி திட்டங்களுக்கு பொருந்தாது.
சேர்க்கைக்கான தகுதி மற்றும் வருகைப்பதிவு தேவை இருக்கிறதா?
ஒவ்வொரு திட்டத்திற்கான தகுதி அளவுகோல்களில் எவ்வித மாற்றமும் இல்லை. தற்போதுள்ள யூஜிசி மற்றும் பல்கலைக்கழக விதிமுறைகளின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.
ஒரு மாணவர் ஏதேனும் ஒரு துறையில் சிறப்புப் பட்டப்படிப்பைத் தொடர விரும்பும் பட்சத்தில், குறைந்தபட்ச அளவுகோல்களின்படி அந்தப் பாடத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும். இல்லையெனில், அந்தக் குறிப்பிட்ட படிப்பில் சேர முடியாமல் போகலாம். ஆனால் இது சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தைப் பொறுத்தது.
அனைத்து கல்வித் திட்டங்களிலும் மாணவர்கள் தேர்வெழுதுவதற்கு குறைந்தபட்ச வருகைப்பதிவு தேவைப்படுவதால், இந்தப் படிப்புகளுக்கான வருகை அளவுகோலை பல்கலைக்கழகங்கள் வகுக்க வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும். யூஜிசி எந்த குறைந்தபட்ச வருகைப்பதிவையும் கட்டாயப்படுத்தவில்லை, இவை பல்கலைக்கழகங்களின் கொள்கைகள்
இந்த முடிவு நடைமுறைக்கு எவ்வளவு சாத்தியமானது?
மாணவர்கள் பலதரப்பட்ட கல்வியைப் பெறுவதற்கு, முடிந்தவரை நெகிழ்வுத்தன்மையை வழங்க முற்படும் தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதன் பகுதியாக வழிகாட்டுதல்கள் உள்ளன, நிச்சயமாக இது மாணவர்களின் திறனைப் பொறுத்தது.
ஒரு மாணவர் ஆஃப்லைன் பயன்முறையில் இரண்டு பட்டங்களைத் தொடர்வது கடினமானது என்றாலும் சாத்தியமற்றது அல்ல.
உதாரணமாக, சென்னை பல்கலைக்கழகத்தில் பி. காம் படிக்கும் மாணவர் மாலையில் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படிக்க விரும்பினால், கொஞ்ச தூரம் நடந்தாலே போதும்.
இரண்டு பட்டப்படிப்புகளில் ஒன்றை ஆன்லைனில் படித்தால் நடைமுறைச் சிக்கல்கள் எதுவும் இல்லை