உதய்பூர் படுகொலை விவகாரம்: ஐ.ஜி முதல் எஸ்.பி வரை கூண்டோடு டிரான்ஸ்பர்...!

நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி அதிர வைத்த உதய்பூர் படுகொலையை முன்கூட்டியே தடுக்காமல் அலட்சியம் காட்டியதாக 32 ஐ.பி.எஸ் அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2022-07-01 13:11 GMT

உதய்பூர் டெய்லர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர்.

நபிகள் நாயகத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா வெளியிட்டார். இந்த கருத்து ராஜஸ்தான் மாநிலத்தில் வன்முறைக்கு காரணமாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் தையல் தொழிலாளி கன்னையா டெலி. இவர், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து கூறியிருந்தார். இதனால், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறை அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலை துண்டிக்கப்பட்டு, கன்னையா படுகொலை செய்யப்பட்டார்.

இந்த பரபரப்பு சம்பவத்திற்கு பின்னர், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு நிறுவன விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், கன்னையா லாலுக்கு அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, உதய்பூர் ஐ.ஜி, எஸ்.பி உள்ளிட்ட 32 ஐ.பி.எஸ் அதிகாரிகளை கூண்டோடு பணியிடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லியில் இருந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News