இன்றைய சிந்தனை (14.04.2022)-இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்.
தன் சமுதாய மக்கள் கல்வியில் மேன்மை அடைய வேண்டும், இழிநிலை போக வேண்டும் என்று பாடுபட்டவர்தான் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.;
சமுதாயம் என்பது பல குடும்பங்களது தொகுப்பாகும். அத்தகைய சமுதாயம் செம்மையுற வேண்டியது அவசியம். அடிமைப்பட்ட பல தேசங்களை விடு விக்க பலரும் போராடினார்கள். அதற்குப் புத்தக அறிவும் துணை நின்றதை அறியலாம். ஆகவே ஒரு சமூகம் செழுமையுறவும் எழுந்து நடக்கவும் படிப்பறிவு துண துணை போகிறது
.படிப்பறிவு என்பது கட்டடத்துக்கு அமைக்கப்படும் அஸ்திவாரம். கல்வி அறிவு அதிகம் இல்லாத காரணத்தாலே நம்மை ஆள்பவர்களை எப்படித் தேர்வு செய்வது எனத் தெரியாமல் இருக்கிறோம். அனைவருக்கும் கல்வி அறிவு கிடைத்தால் சாதி, மத மோதல்கள் இருக்காது. கல்விதான் மனிதர்களை இணைக்கும் பாலம் ..
கல்விதான் பிறப்பால் வந்த பேதம், இழிவு, அடிமை நிலை அனைத்தையும் அகற்றும்.சமுதாயத்தில் உயர்வையும், பாராட்டையும், திறமையையும் அளிக்கும் ஒரே கருவி கல்வி தான் ஆம்,கல்வி என்பது ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல. அனைவருக்கும் பொதுவானது.ஆங்கிலேயர் ஆசிய நாடுகளை அடிமைப்படுத்த முடிந்தது. காரணம் கல்வி அறிவு அப்போது ஆசிய நாடுகள் பெறாமல் இருந்ததேயாகும். ஆகவே படிப்பது மிகவும் அவசியம். கல்வியிலிருந்து நடைமுறைப்படுத்தும் போதுதான் சமுதாயம் செம்மையுறும்.
படிப்பு என்பது தனிமனிதர் வாழ்வை உயர்த்தும்.தான் படித்து உயர்ந்த நிலைக்கு வந்தபின் தான் கற்ற கல்வி அறிவை தன் சமுதாய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுபவர்களை இன்று விரல்விட்டு எண்ணி விடலாம்..ஆனால் தன் சமுதாய மக்கள் கல்வியில் மேன்மை அடைய வேண்டும், இழிநிலை போக வேண்டும் என்று அல்லும் பகலும் பாடுபட்டவர்தான் அண்ணல் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்...
அவரை ஓரளவாவது புரிந்தவர்கள், படித்தவர்களுக்கு மயிர்க் கூச்செரிய வைக்கும் பெயர்! முழுசாகப் புரிந்தவர்களுக்கு தன்னிகரில்லா தலைவர் வழிகாட்டி!
மேலை நாடுகளுக்கு சென்ற பிறகும் கூட விடாமல் துரத்திய வறுமையையும், பட்டினியையும் போராடித் தோற்கடித்து உயர் பட்டங்கள் பெற்றவர்.கொடிய சூழலில் பிறந்து, மோசமான வறுமையில் படித்து,படிப்பில் உலகில் எவரும் தொடாத சிகரத்தை அடைந்தும், அந்த மேதை தான் கற்ற கல்வியை தன் வாழ்க்கைக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல்,தன் சமுதாய மக்களின் விடியலுக்காகப் பயன்படுத்திய மாமனிதர்! அவர் தலித் மக்களுக்காக மட்டுமே எழுதினார், சட்டம் இயற்றினார், போராடினார் என்கிறார்கள். அப்படி ஒரு வட்டத்துக்குள் அவரை அடைக்க முயல்வது அறியாமை.
இந்து சமயத்தில் தீண்டாமைக் கொடுமைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்தார். இந்து சமய சாஸ்திரங்களிலும்புராணங்களிலும், இதிகாசங்களிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்த அம்பேத்கர், மனு ஸ்ம்ருதியில் உள்ள சாதிய அமைப்பு முறை குறித்து கடுமையாக விமர்சித்தார்.
வேதங்களில் இருந்தும் புராணங்களில் இருந்தும் தீண்டாமைக்கு எதிராகப் பல்வேறு ஆதரங்களை எடுத்து எழுதியும் பேசியும் உள்ளார். இந்து சமயத்தை சீர்திருத்த பெரு முயற்சி செய்தார்.
அண்ணல் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமான சாதித் தலைவர் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான, அனைத்து சமுதாயத்திற்கான தேசியத் தலைவர் ஆவார்.
ஆம் நண்பர்களே...!
புதிய இந்தியாவை வடிவமைத்த சிற்பிகளில் மிகமுக்கியமானவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். இந்திய அரசியல் சாசனத்தை வகுத்துக் கொடுத்த சட்ட மேதை அம்பேத்கர் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. தீண்டாமை இழிவுகளை ஒழிக்கவும் சாதி ஏற்றத் தாழ்வுகளை மாற்றி அமைத்து சமத்துவத்தை நிலை பெறச் செய்யவும் அல்லும் பகலும் அயராது உழைத்தவர் என்பதும் நமக்குத் தெரியும்.
பல்துறை வித்தகரும் தலைசிறந்த படிப்பாளியுமான அம்பேத்கர் ஒரு மேன்மையான பொருளாதார வல்லுநர், மிகச்சிறந்த அரசியல்வாதி, தேர்ந்த வழக்கறிஞர், சமூக நீதி போராளி..இன்று அவரின் பிறந்தநாளில் சமதர்ம சமுதாயம் அமைக்க பாடு படுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்..
- உடுமலை சு.தண்டபாணி✒️