கர்நாடகாவில் காங்., வெற்றிக்கு காரணமான டி.கே.சிவக்குமார்: யார் இவர்?

கர்நாடகாவில் காங்., வெற்றியைத் தேடித் தந்த டி.கே.சிவக்குமார் கடந்து வந்த அரசியல் பாதையை தற்போது காணலாம்…

Update: 2023-05-13 13:45 GMT

டி.கே. சிவகுமார். (பைல் படம்) 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் கனகபுரா தொகுதியில் பாஜக மூத்த அமைச்சர் ஆர்.அசோக்கை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் நம்பிக்கையை பெற்றவர். பல்வேறு மாநிலங்களில் சறுக்கல்களை சந்தித்த காங்கிரஸ், கர்நாடகத்தில் மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பதற்கு இவருடைய பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

1989-ம் ஆண்டு மைசூர் மாவட்டத்தின் சாத்தனூர் தொகுதியில் இருந்து முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.சிவக்குமார், அதன்பிறகு 1994,1999 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2008ம் ஆண்டு கனகபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவக்குமார், 2013 மற்றும் 2018-ம் ஆண்டு தேர்தல்களிலும் அதே தொகுதியின் உறுப்பினராக வெற்றி வாகை சூடினார்.

தற்போதைய தேர்தலிலும் கனகபுரா தொகுதியில் டிகே சிவக்குமார் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர். குமாரசாமி ஆட்சியில், டிகே சிவக்குமார் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அதற்கு முன்பு சித்தராமையா அரசில் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தார். 2018-ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுக்கு இடையே கூட்டணி அரசு ஏற்பட டிகே சிவக்குமார் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Tags:    

Similar News