திருப்பதி கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா, கடந்த 15 ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெற்றது.
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி இரவு பெரிய சேஷ வாகன சேவையுடன் கோலாகலமாக தொடங்கியது. அன்று முதல், தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்தியான மலையப்பர் பல்வேறு வாகன சேவைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தசரா விடுமுறை என்பதால் இந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிலையில் 8-ம் நாளான நேற்று காலை தங்க தேரில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து இரவு தங்க குதிரையில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் கடைசி வாகனம் என்பதால் மாட வீதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்து சுவாமியை வழிபட்டனர். மேலும் 441 நடன குழுவினர் 15 குழுக்களாக செயல்பட்டு, மாட வீதிகளில் நடனமாடி அசத்தினர்.
ஒன்பதாவது மற்றும் கடைசி நாளான இன்று இன்று காலை கோயில் திருக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு வராகசாமி கோயில் முகமண்டபத்தை அடைந்தார். அவருடன் சக்கரத்தாழ்வாரும் தனி பல்லக்கில் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது
தொடர்ந்து சக்கரத்தாழ்வாரை கோயில் திருக்குளத்திற்கு கொண்டு சென்ற தேவஸ்தான அர்ச்சகர்கள், மூன்று முறை அவரை தண்ணீரில் மூழ்கச் செய்து தீர்த்தவாரி புனித நீராடல் நிகழ்வை நடத்தினர். அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் மூழ்கி புனித நீராடினர். பின்னர் உற்சவர்கள் ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். அத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.