திரெளபதி முர்மு - ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையடுத்தும் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை 18 ல் நடக்கிறது.மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பழங்குடி இன தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுனருமான திரெளபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடி முன்னிலையில் இன்று தனது வேட்பு மனுவை முர்மு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலில் நிகழ்வில் அ.தி.மு.க சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், டெல்லியில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு சந்தித்து பேசினார். அப்போது, குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற ஆதரவு அளிக்குமாறு, ஓ.பன்னீர்செல்வத்திடம் முர்மு கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பின்போது பி.ரவீந்திரநாத் எம்.பி, மனோஜ் பாண்டியன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வெற்றி வேட்பாளராக திரெளபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க சார்பாக தங்களின் முழு ஆதரவு அவருக்கு இருக்கிறது என்பதை மனப்பூர்வமாகவும் இதயப்பூர்வமாக தெரிவித்து கொள்வதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.