அம்மாடியோவ். பீகாரில் ரயில் என்ஜினையே லவட்டிய கும்பல்
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள கர்ஹாரா ரயில்வே யார்டில், சுரங்கம் தோண்டி, முழு டீசல் இன்ஜினையும் திருடிச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்
பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள கர்ஹாரா ரயில்வே யார்டுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் சுரங்கம் தோண்டி, பழுதுபார்ப்பதற்காக யார்டில் வைக்கப்பட்டிருந்த ரயிலின் முழு டீசல் இன்ஜினையும் பகுதி பகுதியாகத் திருடிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முசாபர்பூரில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) ஆய்வாளர் பிஎஸ் துபே கூறுகையில், கர்ஹாரா யார்டுக்கு பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட டீசல் இன்ஜின் திருடப்பட்டதாக பரௌனி காவல் நிலையத்தில் கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட மூவரும், ரயில்வே யார்டுக்கு சுரங்கம் தோண்டியதாகவும், அதன் மூலம் இன்ஜின் பாகங்கள் மற்றும் பிற பொருட்களை சாக்கு மூட்டைகளில் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தனர்.
விசாரணையின் போது ஸ்கிராப் குடோனின் உரிமையாளரையும் கைது செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தகவலின் அடிப்படையில், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பிரபாத் நகர் பகுதியில் உள்ள ஒரு குப்பை கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது, அதில் இருந்து 13 சாக்குகள் இருந்த ரயில்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை காவல்துறையினர் மீட்டனர்.
மீட்கப்பட்ட பொருட்களில் இன்ஜின் பாகங்கள், பழங்கால ரயில் என்ஜின்களின் சக்கரங்கள் மற்றும் கனமான இரும்பினால் செய்யப்பட்ட ரயில்வே பாகங்கள் ஆகியவை அடங்கும் என்று துபே கூறினார்.
இது தொடர்பாக குப்பை கிடங்கின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
இரும்புப் பாலங்களை அவிழ்த்து அதன் உதிரிபாகங்களைத் திருடுவது போன்றவற்றிலும் கும்பல் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு, பூர்னியா நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய நீராவி இன்ஜினை விற்றதாகக் கூறி, சமஸ்திபூர் லோகோ டீசல் ஷெட்டின் ரயில்வே பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இன்ஜினை விற்க சமஸ்திபூர் கோட்ட இயந்திரப் பொறியாளரின் போலிக் கடிதத்தைப் பயன்படுத்தியதாக கூறினர்.