அக்னிபத் திட்டம் ஒரே இரவில் வந்த திட்டம் அல்ல: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் காட்டம்..!
அக்னிபத் திட்டம் ஒரே நாள் இரவில் கொண்டு வரப்பட்டது அல்ல என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காட்டமாக குறிப்பிட்டார்.;
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
அக்னிபத் திட்டத்தின் பயன்கள் குறித்தும், இன்றைய இளைஞர்கள் மனநிலை குறித்தும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் புதுடெல்லியில் விரிவாக அளித்த பேட்டி:
அக்னி வீரர்கள் 4 ஆண்டு பணிக்கு பிறகு, அக்னிவீரர்களின் எதிர்காலம் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். அவர்கள் இளம் வயதினராக இருப்பார்கள். சான்றிதழ்கள் மற்றும் திறமை பெற்றிருப்பார்கள். தங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்யலாம். எனவே, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வோம் என்ற பயம் கொள்ள தேவையில்லை.
பணம் சம்பாதிக்க யாரும் ராணுவத்தில் சேர்வது கிடையாது. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வருகின்றனர். நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றால், உங்களுக்கு ராணுவத்தில் இடமில்லை.உண்மையான அக்னிவீரரை தவறாக வழிநடத்த முடியாது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட ராணுவத்தில் சேர தயாராகி வருவார்கள்.
அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த திட்டம் ஒரே நாள் இரவில் கொண்டு வரப்பட்டது அல்ல. நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுள்ளது. மனித வளம், தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி ராணுவத்தை மறுசீரமைப்பது மற்றும் மறுகட்டமைப்பது குறித்து ஆராய கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு இளைஞருக்கும் நாட்டை காக்க வேண்டும் என்ற ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருக்கும். அவர்களது ஆற்றலும் திறமையும் நாட்டை வலிமையாக்க உதவுகிறது.
நமது நாடு, பழமையான ராணுவம் கொண்ட இளமையான நாடு. கடந்த 2014ல் மோடி பிரதமராக பதவியேற்ற போது, இந்தியாவை எப்படி வலிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதே அவருக்கு முதன்மை நோக்கமாக இருந்தது. இவ்வாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார்.