ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை: மக்களவைத் தேர்தலில் போட்டியா?

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்வதாக தமிழிசை செளந்தர்ராஜன், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2024-03-18 08:21 GMT

தமிழிசை சௌந்தரராஜன். (கோப்பு படம்).

இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருந்த 2024 மக்களவைத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு முதல் கட்டத்திலேயே மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் 3ஆம் கட்டமாக மே 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. நான்காம் கட்டத் தேர்தல் மே 13, 5ஆம் கட்டத் தேர்தல் மே 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதேபோல 6ஆவது கட்டத் தேர்தல் மே 26ஆம் தேதியும் கடைசியாக 7ஆம் கட்டத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்வதாக தமிழிசை செளந்தர்ராஜன், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை செளந்தர்ராஜன், திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியைத் தழுவினார்.

அதைத் தொடர்ந்து தெலங்கானா மாநில ஆளுநராக 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழிசை செளந்தர்ராஜன் நியமிக்கப்பட்டார். அதை அடுத்து, 2021 பிப்ரவரி 21ஆம் தேதி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

எனினும் தேர்தல் அரசியலில் ஆர்வம் உள்ளதாக ஏற்கெனவே பல்வேறு தருணங்களில், தமிழிசை தெரிவித்து இருந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் தலைவராக இருந்தவர் தமிழிசை. தமிழக பாஜக தலைவர் ஆகவும் செயல்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை செளந்தர்ராஜன், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து தமிழிசை செளந்தர்ராஜன் புதுச்சேரி அல்லது தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மார்ச் 16ஆம் தேதி தெலங்கானா சென்ற பிரதமர் மோடி, தெலங்கானா ஆளுநர் மாளிகையில் தங்கினார். அப்போது தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆளுநர் தமிழிசை பிரதமரிடம் ஆலோசனை செய்ததாகவும் அதற்கு பிரதமரும் பச்சைக் கொடி காட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு மாநில ஆளுநர் பதவிகளை, தமிழிசை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு தமிழிசை சென்னை வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழகம் அல்லது புதுச்சேரி தொகுதியில் தமிழிசை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News