தேஜஸ்வி சூர்யா எதிர்பாராவிதமாக எமர்ஜென்ஸி கதவை திறந்து விட்டார்: மத்திய அமைச்சர் விளக்கம்
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா எதிர்பாராவிதமாக எமர்ஜென்ஸி கதவை திறந்து விட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.;
தேஜஸ்வி சூர்யா (பைல் படம்).
கடந்த டிசம்பர் 1-ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி செல்லும் இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்ஸி கதவை பாஜக எம்பி சூர்யா திறந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த இண்டிகோ விமான நிறுவனம், எமர்ஜென்சி கதவை ஒரு பயணி திறந்ததாகவும், பின்னர் அவர் மன்னிப்பு கேட்டதாகவும் முடித்துக்கொண்டது. இதை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா உறுதிப்படுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கின.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விமானபோக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறுகையில், இண்டர்குளோப் ஏவியேஷன் அளித்த அறிக்கையின் படி, 6இ-7339 என்ற விமானம் சென்னையிலிருந்து திருச்சி புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணித்த தேஜஸ்வி சூர்யா எதிர்பாராவிதமாக எமர்ஜென்ஸி கதவை திறந்து விட்டார். அவர் எந்தவித நோக்கத்தோடும் இந்த செயலை செய்யவில்லை. அவர் எந்தவொரு விதியையும் மீறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று இண்டிகோ நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.