முதல் சுதந்திரப் போரில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிய தாந்தியா தோபே

1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் நடைபெற்றது என்றார்களே, அது சிப்பாய்க் கலகம் அல்ல; முதல் இந்திய விடுதலைப் போர்.

Update: 2022-04-18 05:53 GMT

நம்முடைய பாரத தேசத்தின் இதிகாசங்களில் எத்தனையோ வீரர்களைப் பற்றிப் படிக்கிறோம். அர்ஜுனன், பீமன், அபிமன்யு, அனுமன் என்றெல்லாம் படிக்கும்போது இவர்களைப் போன்ற மாவீரர்கள் இப்போதும் இந்த மண்ணில் தோன்றுகின்றார்களா என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆம்! ஒவ்வொருவர் மனதிலும் இந்தப் புராணகால வீரர்களைப் போல இன்றும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு.

ஆனால் நம் காலத்திலும் அப்படிப்பட்ட வீரனொருவன் நிஜமாகவே இருந்தான். அவன் தான் 1857-58-இல் நடந்த முதல் சுதந்திரப் போரில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிய மராட்டிய சிங்கம் மாவீரன் தாந்தியா தோபே....

வீரம் பொதிந்து கிடந்த இந்த தாந்தியா தோபேயின் செயல்பாடுகள் வெளி உலகத்துக்குத் தெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது 1858-இல் பிரிட்டிஷ் கம்பெனியாரை எதிர்த்து நடந்த முதல் சுதந்திரப் போர்.

1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் நடைபெற்றது என்றார்களே, அது சிப்பாய்க் கலகம் அல்ல; முதல் இந்திய விடுதலைப் போர். அந்தக் களத்தில் ஜான்சி ராணிக்கும், நானா சாகேப்புக்கும் சேனாதிபதியாகத் திகழ்ந்த தாந்தியா தோபே தூக்கில் இடப்பட்ட நாள் இந்த ஏப்ரல் 18.

அவர் மறைந்து வாழ்ந்த நேரத்தில் குவாலியரைச் சேர்ந்த சர்தார் மான்சிங் என்பவனிடம் சென்று தான் உடல் சோர்ந்திருப்பதால் சில நாட்கள் அவருடன் தங்கி ஓய்வெடுத்துக் கொள்வதாகச் சொன்னார் தாந்தியா. அவரும் சம்மதித்து தங்கவைத்துக் கொண்டார். அதற்குள் இந்த செய்தியை அறிந்த பிரிட்டிஷார் எப்படியோ மான்சிங்கை மனம் மாறவைத்து விட்டனர். தாந்தியா தோபே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம், மான்சிங் பிரிட்டிஷ் வீரர்களை வரவழைத்து அவரைச் சுற்றி நின்றுகொண்டு அவரைக் கைது செய்யக் காரணமாக இருந்தான். துரோகியின் துரோகச் செயல் வெற்றி பெற்றது.

1859-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி தாந்தியா தோபே கைது செய்யப்பட்டார். வழக்கம் போல் விசாரணை எனும் நாடகத்தை நடத்தி அவருக்குத் தூக்கு தண்டனை விதித்தனர்...

தூக்குமேடைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஒரு அறைகூவல் விடுத்தார். "அடிமைச்சங்கிலிகளில் இருந்து நான் விடுதலை பெற வேண்டும். பீரங்கியின் வாயில் தெறிக்கும் குண்டில் என் தலை சிதற வேண்டும்; அல்லது தூக்குக் கயிற்றில் என் கழுத்து முறிய வேண்டும்" என்றார்.

தூக்கில் இடுதவற்கு முன்பு, அந்தக் கயிறைத் தானே கழுத்தில் எடுத்து மாட்டிக்கொண்டு, நின்றுகொண்டு இருந்த நாற்காலியை தம் காலால் எட்டி உதைத்தார். அவரது உயிர் அற்ற உடல், அந்த நாள் முழுவதும் தொங்கிக் கொண்டு இருந்தது. அங்கே இருந்த இராணுவ வீரர்கள், ஆங்கிலத் தளபதிக்குத் தெரியாமல் சல்யூட் செய்தார்கள். பொதுமக்கள் அவர் உடலில் இருந்த தலைமுடியின் ஒவ்வொரு மயிரையும் பிடுங்கி எடுத்துக்கொண்டு போய், பொக்கிசமாகப் பாதுகாத்தார்கள்.

இத்தகைய வீரத்திருமகன் உயிர்நீத்த நாள்தான் இந்த ஏப்ரல் 18.

Tags:    

Similar News