இந்தியாவில் அதிக பெண் தொழில்முனைவோரைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு

பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கையில், இந்திய அளவில் எல்லா மாநிலங்களையும் விட தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது

Update: 2021-11-23 15:18 GMT

தமிழ்நாட்டில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க சந்தை வாய்ப்பு, தேவை முக்கிய காரணிகளாக உள்ளது என ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெண் தொழில்முனைவோர் தங்கள் பாதையை ஏன், எந்த முறையில் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து பயணிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினர். ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பின் (2016) அகில இந்திய அறிக்கையின்படி, இந்தியாவில் குறைந்த பட்சம் ஒரு கூலித் தொழிலாளியைப் பணியமர்த்திய, பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 2019 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பெண் தொழில்முனைவோரை நேர்காணல் செய்து தமிழ்நாட்டில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பெண் தொழில்முனைவோருக்கு ஊக்கமளித்து வணிகத்தில் ஈடுபடத் தூண்டும் காரணிகள் பின்வருமாறு:

• பேரார்வம், புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல், சவால்களுக்கான நாட்டம், சமூக விழுமியங்களை உருவாக்குதல்,

• வேலை-வாழ்க்கை சமநிலைக்கான ஆர்வம்

• சமூக ஆதரவு (கணவன் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து), மற்றும்

• நிறுவன ஆதரவு (அரசு உதவி மற்றும் மானியங்கள் போன்றவை).

ஐஐடி மெட்ராஸின் மேலாண்மை ஆய்வுத் துறையின் இணைப் பேராசிரியை டாக்டர் ரூபஸ்ரீ பரல், ஐஐடி மெட்ராஸின் மேலாண்மை ஆய்வுத் துறையின் முனைவர் பட்ட அறிஞரான ஜாஸ்மின் பானுவுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தினார். இந்தக் கண்டுபிடிப்புகள் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஜர்னல் ஆஃப் எண்டர்பிரைசிங் கம்யூனிட்டீஸ்: பீபில் அண்ட் ப்ளேசஸ் இந்த குளோபல் எகானமி (https://doi.org/10.1108/JEC-12-2020-0206) இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரையாகவெளியிடப்பட்டன.

இத்தகைய ஆய்வுகளின் அவசியத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸின் மேலாண்மை ஆய்வுகள் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் ரூபஸ்ரீ பரல், "பெண்களின் தொழில்முனைவு என்பது நாட்டின் பொருளாதாரம், புதுமை, வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு பங்களிக்கும் ஒரு முக்கிய படியாகும். சமூக-பொருளாதார வளர்ச்சியில் பெண் தொழில்முனைவோரின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, பெண் தொழில் முனைவோர் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும், எளிதாக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் காரணிகளை ஆராய்வது மிகவும் முக்கியமானது. இத்தகைய ஆய்வுகாளின் மூலம், பெண் தொழில்முனைவோரின் நல்வாழ்வை மேம்படுத்தவும் பெண் தொழில்முனைவோருக்கு உகந்த சூழலை வளர்ப்பதற்கும் சமூகத்தில் பாலின இடைவெளியைக் குறைப்பதற்கும் சிறந்த முன்முயற்சிகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க வாய்ப்புள்ளது." என்று விவரித்தார்.

தமிழ்நாட்டின் பெண் தொழில்முனைவோர் வளர்ச்சிக்கு, அவர்களின் திறன் மற்றும் அனுபவம், நெட்வொர்க்கிங் வாய்ப்பு, குடும்பத்தின் ஆதரவு மற்றும் நிறுவன ஆதரவு ஆகிய காரணிகள் உதவியுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக வருமானமும் லாபமும் குறைவாக இருந்தாலும், தொழிலைத் தொடர்வதில் திருப்தியடைவதாகவும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் பெண் தொழில்முனைவோர் தெரிவித்தனர். இந்த ஆய்வின்படி, பெரும்பாலான பெண் தொழில்முனைவோர், ஒரு வணிகத்தை நிர்வகிப்பதன் மூலம் சாதனை உணர்வு, நிதிப் பாதுகாப்பு, தொழில் திருப்தி, நெகிழ்வான வேலை நேரம் மற்றும் மற்றவர்களின் நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறும் மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து மேலும் விவரித்த ஐஐடி மெட்ராஸின் மேலாண்மை ஆய்வுகள் துறையின் முனைவர் ஜாஸ்மின் பானு, "பெண் தொழில்முனைவோரை அரசாங்கம், கொள்கை வகுப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஊக்குவிக்க வேண்டும். சிறு மற்றும் குறுந்தொழில் துறைகளில் தொழில் தொடங்கவும் தொடரவும் அதிக பெண்களை ஊக்குவிக்க பொருத்தமான கொள்கைகள் மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டும். அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட வேண்டும், மேலும் அவர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டும், இதனால் அவர்கள் அதிக உயரங்களை அடைய முடியும்." என்று கூறினார்.

இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்:

• பெண்களால் நடத்தப்படும் வணிகங்களின் வளர்ச்சியானது, தனிநபரின் சமூக ஆதரவு மற்றும் முறையான நிறுவன ஆதரவைப் பெரிதும் சார்ந்துள்ளது.

• பெண்களின் வாழ்க்கைத் தரம், மனநலம் மற்றும் நல்வாழ்வை தொழில்முனைவு மேம்படுத்துகிறது.

ஆய்வின் பரிந்துரைகள்:

• பெண் தொழில்முனைவோருக்கு ஆளுமை மேம்பாடு, திறன் பயிற்சி, தனித்துவமான தொழில்நுட்ப மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு திட்டங்களை வழங்குதல்

• சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் அவர்களை இணைக்க வர்த்தகக் கண்காட்சிகளில் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல்

• ஊடகங்கள், மற்றும் கல்வித் திட்டங்களில் பெண் தொழில் முனைவோர் முயற்சிகளை சித்தரிப்பதன் மூலம் பெண்கள் மீதான சமூகத்தின் அணுகுமுறையை மாற்றுதல்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அதிக பெண் தொழில்முனைவோரைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. மாநிலத்தின் சாதகமான பொருளாதார, சமூக-கலாச்சார சூழல் மற்றும் கல்வி வாய்ப்புகள் இந்த மாநிலத்தில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கைக்குப் பெரிதும் பங்களிக்கின்றன.

Tags:    

Similar News