முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு கோரிய மனு தள்ளுபடி
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 1456 இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
2021 மற்றும் 2022ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிந்த பிறகு 1,456 இடங்கள் காலியாக இருப்பதாகவும் அந்த காலி இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்ஆர் ஷா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இரு தினங்களுக்கு முன்பு நடந்த விசாரணையின்போது, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 1,456 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களுக்கான இடங்கள் உரியமுறையில் ஒதுக்கி தரப்படவில்லை எனில் நீதிமன்றமே தலையிட்டு உத்தரவிட நேரிடும் என எச்சரித்திருந்தனர்.
மேலும், இந்த வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மருத்துவ கவுன்சிலிங் கமிட்டிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் வாக்குமூலத்தில் காலியாக உள்ள 1,456 இடங்களும் 1,117 இடங்கள் மருத்துவ துணை படிப்பு இடங்கள் என்று கூறியுள்ளது. பல முறை கலந்தாய்வு நடத்தியும் மாணவர்கள் இந்த இடங்களை தேர்வு செய்யவில்லை என்று தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி கூறுகையில், 40 ஆயிரம் இடங்களை கொண்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 1,456 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. அதிலும், ஏற்கனவே மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வுகளில் 8-9 சுற்று கலந்தாய்வு நடத்தபட்ட பின்னரே சில நான்- கிளினிக் படிப்புகளுக்கான இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
அதுமட்டுமல்லாமல், இதற்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்ப, கால அவகாசம் தேவைப்படும். இது, இந்த கல்வியாண்டில் பாதிப்பையும், கால விரயத்தையும் ஏற்படுத்தும். இது, பொது சுகாதாரத்தில் பாதிப்பை உருவாக்கிவிடும். எனவே, சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறதுஎன்று கூறினார்.