பெண் வேடமிட்டு ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் விசித்திர திருவிழா

பெண்கள் போல் வேடமிட்டு ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விசித்திர சமய விளக்கு திருவிழா கேரள மாநிலம் கொல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றது.;

Update: 2023-03-28 09:45 GMT

பைல் படம்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டம்குளக்கரா ஸ்ரீ தேவி கோவிலில் ஐந்து முக விளக்கை கையில் ஏந்தி, அழகு மிளிர மங்கையர் வேடத்தில் வலம் வரும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் சமய விளக்கு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொருராண்டும் இந்த கோவிலில் சமயவிளக்கு திருவிழாவின் போது கேரளா முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் அழகிய பெண்வேடமிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம், செல்வம் பெருகும் என்பது கேரள மக்களின் நம்பிக்கை. கொரோனாவால் 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த இந்த விழா, கடந்த ஆண்டு முதல் மீண்டும் சமய விளக்கு திருவிழா களைகட்ட துவங்கியது.

முன்னொரு காலத்தில் கோவில் அமைந்துள்ள இந்த பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற சிறுவர்கள் ஒரு கல்லில் தேங்காய் உடைத்தபோது அதிலிருந்து குருதி வழிந்ததாகவும் இதனால் பயந்து போன அவர்கள் ஊர் பெரியவர்களிடம் இது குறித்து தெரிவித்ததாகவும் நம்பப்படுகிறது. இதனையடுத்து ஜோதிடர் ஒருவரிடம் பரிகாரம் கேட்க, அவர் அந்த கல்லில் இருப்பது வனதுர்கா என்று கூறி, கோவில் எழுப்பி வழிபட அறிவுறுத்தி உள்ளார். அன்று அங்கு எழுப்பப்பட்ட கோவிலில் தான் இந்த விசித்திர வழிபாடு நடைபெற துவங்கியுள்ளது.

ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே வழிபட்டு வந்த நிலையில் கோவிலுக்குள் நுழைய ஆண்கள் பெண்வேடமிட்டு சென்றதால், காலப்போக்கில் அந்த வழக்கமே நிலைத்துவிட்டதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் மூங்கில்களால் கூரை வேய்ந்து அமைக்கப்பட்ட இந்த கோவில் பின்னர் பெரியதாக கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இந்த சமயவிளக்கு பூஜையில் தற்போது ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். விசித்திரமான இந்த திருவிழாவில் ஒவ்வோராண்டும் பங்கேற்கும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதோடு, ஆண்களுக்கு ஒப்பனை செய்ய கோவில் வாசலிலேயே ஒப்பனைக் கலைஞர்களும் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் சென்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்கள் மிகவும் உற்சாகமாக இந்த சமயவிளக்கு பூஜையில் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News