மாநிலங்களுக்கு மத்திய அரசின் முழு ஆதரவு கிடைக்கும்: நரேந்திர சிங் தோமர்

2.25 கோடிக்கும் அதிகமான கடன் அட்டைகள் மூலம் , விவசாயிகளுக்கு ரூ.2.25 இலட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-21 17:39 GMT

ரபி பருவத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசின் முழு ஆதரவு கிடைக்கும் என்று அமைச்சர் உறுதி, தமிழகத்தில் அதிகரிக்கவிருக்கும் எண்ணெய்ப் பனை சாகுபடி

2021- 22 ரபி பிரச்சாரத்திற்கான தேசிய மாநாட்டை காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசிய மத்திய வேளாண் அமைச்சர் . நரேந்திர சிங் தோமர், விளைச்சலையும், உற்பத்தித்திறனையும் அதிகரிக்கவும், பருவநிலை மாற்றம் மற்றும் மானாவாரி வேளாண்மைச் சவால்களை எதிர்கொள்ளவும் மாநிலங்களுக்கு ஆதரவளிப்பதில் மத்திய அரசு முழு உறுதிபூண்டுள்ளது என்றார். விவசாயிகளைப் பாதுகாக்கவும், ஆதரிக்கவும் பிரதமர் எப்போதும் உறுதியாக உள்ளதாகவும், 'தற்சார்பு விவசாயியை' உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நீர், மின்சாரம் மற்றும் உரங்களை திறம்படப் பயன்படுத்தவும், நில வளத்திற்கு நன்மை பயக்கும் குறைந்த விலையிலான நானோ-உரத்தைப் பயன்படுத்தவும் மாநிலங்களை அமைச்சர் வலியுறுத்தினார். அரசின் பல்வேறு திட்டங்களால் சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், கிரிஷி விக்யான் கேந்திரங்கள் அவர்களைச் சென்றடைய வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

பிரதமர் கிசான் திட்டம் மற்றும் விவசாயிகள் கடன் அட்டை ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். 2.25 கோடிக்கும் அதிகமான கடன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.2.25 இலட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ஃபசல் பீமா காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

முந்தைய பருவத்தில் விளைச்சல் செயல்திறனை மதிப்பீடு செய்வது, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து ரபி பருவத்திற்கான பயிர் வாரியான இலக்குகளை நிர்ணயிப்பது, முக்கியமான உள்ளீடுகளை வழங்குவதை உறுதிசெய்தல், உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் புதுமையான தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்வது உள்ளிட்டவை இந்த மாநாட்டின் நோக்கமாகும். எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்புகளின் உற்பத்தியை அதிகரிப்பது அரசின் முன்னுரிமையாகும்.

விவசாயிகளுக்குத் தரமான விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்படுவதை மாநிலங்கள் உறுதி செய்யவேண்டும் என்று வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே கூறினார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட எண்ணெய்ப் பனை இயக்கத்தின் மூலம் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, குஜராத், சத்தீஸ்கர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபாரில் கூடுதலாக 6.50 இலட்சம் ஹெக்டேர் நிலங்களில் எண்ணெய்ப் பனை விவசாயம் நடைபெறும். இதன் மூலம் 2025-26-க்குள் எண்ணெய்ப் பனை விவசாயம் நடைபெறும் நிலத்தின் அளவு 10.00 இலட்சம் ஹெக்டேர்களாகவும், 2029-30-க்குள் 16.71 இலட்சம் ஹெக்டேர்களாகவும் உயரும்.

Tags:    

Similar News