மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்

Update: 2021-10-08 07:00 GMT

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி, துரத்தினர். இதனால் பயந்த நிலையில் வேறு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றபோது அங்கும் வந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டினர். இது இலங்கை கடற்படையினரின் அத்துமீறியச் செயலாகும்.

இது போன்ற இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் கேள்விக்குறியாக நீடிக்கிறது.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவதும், லட்சக்கணக்கில் சேதம் ஏற்படுவதும், வருமானம் கிடைக்காததும் தொடர்கிறது.

இதனால் தமிழக மீனவர்களின் குடும்பங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல தங்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி இருக்கின்ற வேளையில் மீன்பிடிக்கச் செல்வதும், இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுவதும், வருவாய் ஈட்ட முடியாமல் குடும்பச் செலவுக்கே பொருளாதாரம் இல்லாமல் அவர்கள் சிரமப்படுவதும் மிகவும் கவலை அளிக்கிறது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசும் மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை கடற்படை அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எனவே மத்திய-மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் தொடர்பான கோரிக்கைகளை மிக முக்கிய கவனத்தில் கொண்டு அவை அனைத்தையும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News