சிறையில் சித்து மூஸ் வாலா கொலைக் குற்றவாளிகள் மோதல்: இருவர் உயிரிழப்பு
சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் பஞ்சாப் மாநிலம் கோயிண்ட்வால் சிறையில் பெரும் மோதலைத் தொடர்ந்து உயிரிழந்தனர்;
பஞ்சாப் மாநிலம் கோயிண்ட்வால் சிறையில் குண்டர் குழுக்களுக்கு இடையே நடந்த பெரும் மோதலில், சித்து மூஸ்வாலா கொலையில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு கைதிகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் படாலாவைச் சேர்ந்த மன்தீப் சிங் என்ற துஃபான் மற்றும் புத்தலானாவைச் சேர்ந்த மன்மோகன் சிங் என்ற மோஹ்னா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேஷாவ் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு கைதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
கடந்த ஆண்டு பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 28 வயதான பாடகர் சித்து மூஸ்வாலா , மே 29, 2022 அன்று பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஓட்டுநர் இருக்கையில் சரிந்த நிலையில் காணப்பட்ட மூஸ்வாலா மீது தாக்குதல் நடத்தியவர்கள் 30 ரவுண்டுகளுக்கு மேல் சுட்டனர்.
மூஸ் வாலா துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு வாகனங்களை வழங்கியதாக துஃபான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணையில் லாரன்ஸ் பிஷ்னோய்தான் பகல் கொலைக்கு மூளையாக செயல்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கனடாவில் இருப்பதாகக் கூறப்படும் அவரது நெருங்கிய உதவியாளர் கோல்டி ப்ரார் என்பவரும் விசாரணையில் இருந்தார். நவம்பர் 23 அன்று, டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த இளைஞர்களை சேர்க்க சதி செய்ததாக கூறப்படும் வழக்கில் பிஷ்னோய்யை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.