தேர்தல் பத்திரங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவு
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்கள் முழுமையடையவில்லை என்று எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நன்கொடை அளிக்க அனுமதித்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்த விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஒருநாள் முன்னதாகவே, தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை அதன் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
ஆனால் முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கவில்லை. தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார்? எந்த தேதியில் வாங்கினார்கள்? எவ்வளவு தொகை கொடுத்து வாங்கினார்கள்? எந்த அரசியல் கட்சி எந்த தேதியில் குறிப்பிட்ட தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொண்டது என்ற விவரங்களை வழங்க வேண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி எஸ்பிஐ வங்கி வழங்கிய புதிய விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
"ஒவ்வொரு தகவல்களும் வெளிவர வேண்டும். அனைத்து விவரங்களும் வெளிவர வேண்டும். எதுவும் மறைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்" என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எஸ்.பி.ஐ.யிடம், "தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து முக்கியத் தகவல்களையும் வெளிடுமாறு கேட்டிருந்தோம். பத்திரத்தை வாங்குபவர், பத்திரத்தின் அளவு மற்றும் வாங்கிய தேதி ஆகியவை இதில் அடங்கும். பத்திரத்தின் வரிசை எண்ணை நீங்கள் குறிப்பிடவில்லை. எங்களின் முடிவில் அனைத்து தகவல்களையும் வெளியிடுமாறு கேட்டிருந்தோம்,” என்றார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் குறித்து எஸ்பிஐ அளித்த “முழுமையற்ற தரவு”க்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
இந்தத் திட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், கடந்த 5 ஆண்டுகளில் அளிக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு வங்கிக்கு உத்தரவிட்டது.தேர்தல் ஆணையத்தின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகள் முழுமையற்றது என கூறி எஸ்பிஐக்கு நோட்டீஸ் அனுப்பியது.