செப். 11: வீரத்துறவி விவேகானந்தர் புகழ்பெற்ற சிகாகோ சொற்பொழிவு நடத்திய தினம்
இந்தியாவின் பெருமைகளை வெளிநாடுகளில் பரவச் செய்த வரலாற்று நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது, சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு!
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆகியிருந்தது. அதன் நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கு, அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில், பிரம்மாண்டமான ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கண்காட்சியில் அறிவியல், பொருளாதாரம் என்று சுமார் 20 பேரவைகள் நடைபெற்றன. அங்கு சர்வ சமய பேரவை சொற்பொழிவுகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, பதினேழு நாட்கள் நடைபெற்றன. அங்கு ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து நடத்தினார்கள், ஒவ்வொரு பிரிவிலும் நிகழ்ச்சிகள் இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் நடைபெற்றது. அந்தச் சொற்பொழிவுகளில் 4000-க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டார்கள்.
யூத மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம், பௌத்த மதம், தாவோ மதம், கன்ஃபூசியஸ் மதம், ஷிண்டோ மதம், ஜொராஷ்டிரிய மதம், ஜைன மதம், இந்துமதம் ஆகிய மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் கலந்துகொண்டார்கள்.
இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.
இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேளையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது. விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த பார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது. அதனால் தம்மைவிடச் சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார்.
இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். 1893 மே 31 அன்று அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார். சிகாகோவில் இந்து சமயப் பெருமைகளை சுவாமி விவேகானந்தர் எடுத்துக்கூறுவதற்கு முன்னர்வரை, இந்தியாவை சாதுக்களும் பாம்புகளும் குரங்காட்டிகளும் நிறைந்த நாடு என்பதாக மட்டுமே வெளிநாட்டினர் கற்பனை செய்துவைத்திருந்தனர்.
1893-செப்டம்பர் 11 ஆம் தேதி, காலை 10 மணிக்கு சிகாகோ சர்வ சமயப் பேரவை துவங்கியது. அதில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு செய்வதற்கு முன்பு, தன் குரு ஸ்ரீராமகிருஷ்ணரையும், கல்விதேவதை சரஸ்வதியையும் நினைத்து பிரார்த்தனை செய்தார்.
இந்த மாநாட்டிற்குப் பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்ட விவேகானந்தர், அனைத்துச் சமயத்தைச் சார்ந்தவர்கள் பேசுவதையும் கவனித்தார். அங்கு பேசிய மேலைநாட்டு மத போதகர் அனைவரும் “ஜென்டில்மேன்” என்று தங்களின் பேச்சைத் தொடங்கினர். இந்த வார்த்தை கூடியிருப்போருக்கும், சொற்பொழிவாளருக்கும் இடைவெளி ஏற்படுத்துவதாக விவேகானந்தர் எண்ணினார்
விவேகானந்தர் பேச வேண்டிய முறை வந்தது. அவர் மேடை ஏறியதும், அனைவரும் விவேகானந்தரை வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் பார்த்தனர். அவருடைய காவி உடையும், தலைப்பாகையும் மேலை நாட்டவர்களுக்குச் சிரிப்பை உருவாக்கியது.. பலர் முகம் சுளித்தனர். இதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை; கண்டு கொள்ளவும் இல்லை.
அமெரிக்க சகோதர சகோதரிகளே! என்று தமது சொற்பொழிவைக் கம்பீரமாக விவேகானந்தர் தொடங்கினார்.
அவ்வளவுதான்! சிஸ்டர்ஸ் அன்ட் பிரதர்ஸ் ஆப் அமெரிக்கா என்ற சுவாமி விவேகானந்தரின் இந்த ஓரிரு சொற்கள். அங்கு ஓர் அற்புதத்தையே நிகழ்த்திவிட்டது! ஆம் இந்தச் சொற்களைக் கேட்டு, அங்கிருந்த ஆயிரக் கணக்கான மக்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது. அவர்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து உற்சாகத்துடன் கைதட்டி விடாமல் தொடர்ந்து கரவொலி எழுப்பினார்கள்.
சுவாமி விவேகானந்தர் சிஸ்டர்ஸ் அன்ட் பிரதர்ஸ் ஆப் அமெரிக்கா என்று கூறியதைக் கேட்டு, அவையில் இருந்த மக்கள் அத்தனை பேரும் தங்களை மறந்து இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். சுவாமிஜி இடையில் பேசுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அங்கு அப்போது இருந்த கரவொலி காரணமாக அவரால் பேச முடியவில்லை
கரவொலி ஓய்ந்ததும், சுவாமிஜி தன் உரையைத் தொடர்ந்தார். ஆங்கிலத்தில் சுவாமிஜி இந்தச் சொற்பொழிவை நான்கு நிமிடங்கள்தான் பேசினார். நான்கு நிமிடங்கள் கொண்ட இந்த சொற்பொழிவு, 15 வாக்கியங்களையும் 473 சொற்களையும் கொண்டிருந்தது.
“பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்துக்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக்கொள்ளவும் செய்கிறோம்
“உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டைவிட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவுக்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த இஸ்ரேலியர்களை மனமாரத் தழுவித்கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். பெருமைமிக்க ஸொராஷ்ட்ரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமைகொள்கிறேன்.
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்தப் பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதைவிடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும் என கூறினார்
இப்படிச் சொன்ன விவேகானந்தர் தனது சொற்பொழிவை ஒரு எச்சரிக்கையுடன் முடித்தார்: “இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மதவெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடையப் பல்வேறு வழிகளில் சென்றுகொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன் என முடித்தார்
இந்த மாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார். அப்போது, “அளவுக்கு மீறிய மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் இறுகப் பற்றியுள்ளன; வன்முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டன.
அந்தப் பயங்கரப் பைசாக் கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர் நிலை எய்திருக்கும் என்று விவேகானந்தர் முழங்கினார்.
விவேகானந்தர் பேசிவிட்டு வெளியில் வந்ததும் ஒரு பெரும் கூட்டம், அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகக் காத்திருந்தது அதன்பின் விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள், பல்வேறு ஊர்களில் விவேகானந்தரைப் பேச வைத்து மகிழ்ந்தனர். விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோதே அவருடைய சொற்பொழிவுகள் நூல்வடிவம் பெற்று அமெரிக்க மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன.