திரௌபதி முர்முவை சிவசேனா ஆதரிக்கும்: உத்தவ் தாக்கரே
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்
தேசிய ஜனநாயக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவை வழங்குமாறு சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கரேவை வலியுறுத்திய ஒரு நாள் கழித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சிவசேனா எம்.பி.க்கள் கூட்டத்தில் யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. எந்த அழுத்தமும் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தாக்கரே கூறினார்.
முன்னதாக, சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், சிவசேனா முர்முவை ஆதரித்தாலும் அது பாஜகவை ஆதரிப்பதாக அர்த்தமல்ல என்றார் . "சிவசேனா எது சரி என்று நினைக்கிறதோ அதைச் செய்கிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் வேட்பாளர் டிஎன் சேஷன் மற்றும் யுபிஏ வேட்பாளர்களான பிரதீபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம். அரசியலுக்கு அப்பாற்பட்ட பாரம்பரியத்தை சேனா கொண்டுள்ளது. தேசிய நலனுக்காக மக்களை ஆதரிப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்," என்று தெரிவித்தார் .
திங்களன்று உத்தவ் தாக்கரே அழைத்த கூட்டத்தில், பெரும்பான்மையான எம்.பி.க்கள் கட்சி என்டிஏவின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் பாவனா கவ்லி ஆகிய இரு எம்.பி.க்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று ராவத் கூறினார் .