மோடி வருகையின் பின்னணியில் தனுஷ்கோடி- இலங்கை தலைமன்னார் இடையே கடல் பாலம்

மோடி வருகையின் பின்னணியில் தனுஷ்கோடி- இலங்கை தலைமன்னார் இடையே கடல் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-01-22 10:13 GMT

சேது சமுத்திர திட்டத்தின் மாதிரி வடிவமைப்பு.

தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் இருக்கும் தலை மன்னாரை இணைக்கும் விதமாக கடல் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வருட தொடக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் சேது சமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபையில் அதிரடியாக தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். அவரின் தனி தீர்மானம் சட்டசபையில் வெற்றிபெற்றது.

கடலுக்கு அடியில் ராமர் பாலமே இல்லை என நாடாளுமன்றத்தில் கடந்த 2022 டிசம்பர் மாதம் மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்தது. இதையடுத்தே தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த திட்டத்தை பாஜக சட்டசபையில் கடுமையாக எதிர்க்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க.வும் இந்த திட்டத்தை ஆதரித்தது. இன்று திட்டத்தை ஆதரித்து சட்டசபையில் பேசிய நயினார் நாகேந்திரன், ராமரை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம். அப்படி இருக்கும் போது ராமாயணம் கற்பனை என்றெல்லாம் நீங்கள் சொல்ல கூடாது. ராமர் பாலம் கட்டினாரா என்று தெரியாது.. இது தெய்வ நம்பிக்கை தொடர்பானது. இதை எல்லாம் எப்படி அனுமதிக்க முடியும். சேது சமுத்திர திட்டம் வந்தால் உண்மையில் நான்தான் மகிழ்ச்சி அடைவேன். நான் தென் மாவட்டத்தை சேர்ந்தவன். தென் மண்டலம் இதனால் வேகமாக வளர்ச்சி அடையும்.

தென் மண்டலத்தில் கடல் வழி போக்குவரத்து எளிமையாக்கும். இதனால் தென் மண்டலம் வளம் பெறும். அதனால் இந்த திட்டத்தால் அதிகம் சந்தோசம் அடையும் நபராக நானாக தான் இருப்பேன். முதலில் வாஜ்பாய் காலத்தில் இதற்காக சோதனைகள் செய்யப்பட்டன. இங்கே பெரிய டீம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில் திட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் என்று ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டது. அதன்பின் மன்மோகன் சிங் காலத்தில் இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

கருணாநிதி இதற்காக குரல் கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து அந்த திட்டம் பற்றி பேசி வந்தார். ஆனால் இந்த பகுதி ஆழம் இல்லாத பகுதி. இங்கே மண் எடுக்க எடுக்க மண் சரியும். இதனால் இங்கே கட்டுமானம் செய்வது மிகவும் கடினம். இங்கே பெரிய ஆழம் இல்லை. பக்கத்திலேயே மண்டபம் இருக்கிறது. அதனால் இங்கே போக்குவரத்து மிகவும் கடினம். அதேபோல் இது தெய்வமாகி மதிக்கப்படும் ராமர் கட்டியதாக நம்பப்படும் பாலம். அதை எல்லாம் நினைவில் வைத்து இங்கே கட்டுமானத்தை தொடங்க வேண்டும். கட்டுமானம்: இந்த திட்டத்தை கொண்டு வந்தால் எங்களை விட யாரும் அதிகமாக மகிழ்ச்சி அடையமாட்டார்கள். ராமர் பாலத்திற்கு சேதமில்லாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டும். அதை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்தால் அதற்கு பா.ஜ.க. ஆதரவு தரும். இங்கே இருக்கும் கட்டுமான பலத்தை ஆய்வு செய்ய வேண்டும். முறையாக ஆய்வு செய்த பின்பே இந்த திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தோம். அதனால் இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று பா.ஜ.க. எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசினார்.

இந்த சேது சமுத்திர திட்டம் இன்னும் தொடங்காத நிலையில், தற்போது தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் இருக்கும் தலை மன்னாரை இணைக்கும் விதமாக கடல் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு 3 நாள் பயணமாக வந்த நிலையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு சென்று ராமர் பாலம் இருந்ததாக கூறப்படும் அரிச்சல் முனையை பார்வையிட்டதோடு, கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார். இந்த நிலையில்தான் தற்போது இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வங்காள விரிகுடாவின் குறுக்கே இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி மற்றும் இலங்கை தலைமன்னாரை  இணைக்கும் 23KM கடல் பாலத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை மத்திய அரசு நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்திட்டம் நிறைவேறினால், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகத்திற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவிலேயே இது பெரிய திட்டமாக இருக்கும். அதோடு மிக முக்கியமாக பாதுகாப்பு ரீதியாக இந்தியா - இலங்கை இடையிலான உறவை புதுப்பிக்கவும், சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை எதிர்க்கவும் இந்த திட்டம் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News