ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2022-05-18 05:23 GMT

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணைக்குப் பிறகு, மத்திய அரசு சார்பில் கடந்த வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

பேரறிவாளனை விடுவிப்பது என அரசியல்சாசனப் பிரிவு 161-ன்படி தமிழக அரசு எடுத்த முடிவு என்பது அரசியல் சாசனத்துக்கும், குற்றவியல் சட்டப்பிரிவுகளுக்கும் உட்பட்டு எடுக்கப்பட்ட சரியான முடிவுதான் என தமிழக அரசு தெரிவித்தது. வழக்கின் மற்ற வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில், நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு,  இன்று காலை தீர்ப்பு வழங்கினர். அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில்,  பேரறிவாளனை விடுவித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா தங்களது தீர்ப்பில், சட்டப்பிரிவு 161-வது பிரிவில் ஆளுநர் முடிவெடுக்க தாமதம் செய்ததால்,  142-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக  தெரிவித்தனர். 

மாநில அரசு முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுதலை செய்யும் முடிவை எடுத்ததாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்துவது தவறு என்றனர். தீர்ப்பை கேட்டது, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் மற்றும் சகோதரி உள்ளிட்டோர் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். 

Tags:    

Similar News