கெஜ்ரிவாலை பரிசோதிக்க திகார் சிறைக்கு செல்லும் எய்ம்ஸ் மருத்துவர் குழு
கெஜ்ரிவாலின் உடல்நலனை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஒரு மருத்துவக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது.;
டெல்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு சிறையில் இன்சுலின் வழங்குவதில்லை என கடந்த வெள்ளியன்று(ஏப். 19) பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதன் காரணமாக தனக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவித்திருந்தார்.
டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் இன்சுலின் வழங்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல மத்தியில் ஆளும் பாஜக முயற்சிப்பதாக பகிரங்க குற்றச்சாடை முன்வைத்தார் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால். நாடு முழுவதும் இவ்விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சிறையிலிருந்தபடியே, காணொலி வாயிலாக தனக்கு வழக்கமாக சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(ஏப். 22) டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி காவேரி பாவேஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலின் உடல்நலனை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஒரு மருத்துவக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. அவருக்கு இன்சுலின் தேவைப்படுகிறதா என்பதை பரிசோதித்து தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில் காணொலி வாயிலாக தனக்கு வழக்கமாக சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என நீதிபதி காவேரி பாவேஜா நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.