பணக்கார கடவுள் திருப்பதி ஏழுமலையானுக்கு நாளுக்குநாள் கூடும் மவுசு: குவியும் பக்தர்கள்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 லட்சத்து 47 ஆயிரத்து 708 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Update: 2022-06-24 08:02 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவில்.

பணக்கார கடவுள் என திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் குறிப்பிடுவர்.உலகம் முழுவதும் பல்வேறு கடவுள் நம்பிக்கையும் வழிபாடுகளும் இருந்து வரும் நிலையில் அனைத்து கடவுள்களிலும் அதிக சொந்து மதிப்புள்ள கடவுளாக திருப்பதி ஏழுமலையான் கோவில் பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் காணிக்கை செலுத்துகின்றனர். அந்த வகையில், தங்கம், வெள்ளி , பணம் மற்றும் சொத்துக்களை பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கி வருவதே ஏழுமலையானுக்கு இவ்வளவு சொத்து சேர்ந்ததற்கு காரணம்.

பணக்கார கடவுள் என்பதாலோ என்னவோ, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் திருப்பதியை நோக்கி எப்போதும் குவிந்த வண்ணம் உள்ளனர். திருப்பதி கோவிலில் பக்தர்கள் இரவு பகல் பாராமல் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 90,471 பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்றும் ரூ 4.13 கோடி உண்டியலில் காணிக்கை வசூலானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 லட்சத்து 47 ஆயிரத்து 708 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 2 லட்சத்து 74 ஆயிரத்து 840 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மொத்தம் ஒருவாரத்தில் மட்டும் ரூ.29.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது. இதற்கிடையில், திருப்பதி ஏழுமலையானை, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News