சபரிமலையில் மாற்றுத்திறனாளி இளைஞரை முதுகில் சுமந்து சென்ற கோயில் காவலர்..
மாற்றுத்திறனாளி இளைஞரை சபரிமலை சன்னிதானம் வரை முதுகில் சுமந்து சென்ற கோயில் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.;
மேற்குதொடர்ச்சி மலையில், கேரள மாநிலம், பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று வருவது வழக்கம். மலையாள மாதத்தில் முதல் 5 நாட்கள் இந்தக் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு.
மேலும், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பக்தர்களின் வசதிக்காக நாள் முழுவதும் நடை திறந்து இருக்கும். தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோயிலில் கடந்த மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, 17ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலங்களில் சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.
இதற்கிடையே, கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 5 போலீஸாருக்கும் சின்னம்மை பாதிப்பு இருப்பது சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் உள்ளிட்டோர் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என கேரள சுகாதாரத் துறையில் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
முதுகில் தூக்கிச் சென்ற காவலர்:
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்லும் நிலையில், சபரிமலை அய்யப்பன் கோயிலில் மலை ஏற சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கோயிலுக்குள் செல்லும் வகையில் டோலி வசதி உள்ளது. ஆனால் அதற்கு 6000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தநிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த அல்லிராஜ் என்ற மாற்றுத்திறனாளி அய்யப்ப பக்தர் சபரிமலை கோயிலுக்கு வந்தார். டோலியில் செல்லும் அளவுக்கு அவரிடம் பொருளாதார வசதி இல்லாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு மலையேறிக் கொண்டிருந்தார்.
அப்போது, கோயில் பாதுகாவலராக பணியாற்றி வரும் குமார் என்பவர் அல்லிராஜியின் நிலையைக் கண்டு மிகவும் வேதனை அடைந்தார். உடனே சுதாரித்துக் கொண்ட காவலர் குமார், நேராக அல்லிராஜியிடம் சென்று தனது முதுகில் ஏறிக் கொள்ளுமாறு கூறினார்.
முதலில், யோசித்த அல்லிராஜ், சக பக்தர்கள் வலியுறுத்தியதால் காவலர் குமாரின் முதுகில் ஏறிக் கொண்டார். இதைத்தொடர்ந்து, காவலர் குமார் தனது முதுகில் அல்லிராஜை சுமந்தபடி நீலிமலை, கழுதை ஏற்றம் என மிகவும் கஷ்டமானப் பகுதிகளை எல்லாம் கடந்து சன்னிதானத்தில் கொண்டு விட்டார்.
காவலர் குமாரின் இந்த மனிதாபிமான நடவடிக்கையைக் கண்ட அய்யப்ப பக்தர்கள் சிலர் அந்த செயலை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். தற்போது அந்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கோயில் காவலர் குமார் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோயில் காவலர் குமாரின் மனிதாபிமான செயலுக்கு சமூக வலைதளங்கள் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.