Sabarimala Ayyappan Temple- வரும் 14, 15 தேதிகளில் பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வரவேண்டாம்; கேரள அரசு வலியுறுத்தல்

Sabarimala Ayyappan Temple- நாளை, நாளை மறுதினம் ( ஜன. 14, 15) ஆகிய நாட்களில் சபரிமலைக்கு வருவதை பெண்கள் பக்தர்கள், குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என, கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

Update: 2024-01-13 12:05 GMT

Sabarimala Ayyappan Temple- சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு நாளை, நாளை மறுதினம் பெண்கள், குழந்தைகள் வருவதை  தவிர்க்க வலியுறுத்தல் (கோப்பு படம்)

Sabarimala Ayyappan Temple, Kerala State Govt- சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக திங்கள்கிழமை(ஜன.15) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படும் என திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு அறிவித்துள்ள நிலையில், பொங்கல் விடுமுறையையொட்டி ஜன.14, 15 ஆகிய இரண்டு நாள்களுக்கு பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு 5 நாள்கள் விடுமுறை என்பதாலும், அடுத்த 10 நாள்களில் மகர விளக்கு சீசன் நிறைவடைய இருப்பதாலும் பக்தா்கள் அதிக எண்ணிக்கையில் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு அடுத்த சில நாள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு வசதி புதன்கிழமை (ஜன.10) முதலே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை (ஜன.13) வரை இணையதளத்தில் முன்பதிவு செய்த 80 ஆயிரம் போ் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். முன்பதிவு இல்லாத பக்தா்கள் யாரும் சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். ஜன.13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மகரவிளக்கு பிரசாத சுத்திக்கிரியைகள் நடைபெறவுள்ளன.

மகரவிளக்கு பூஜைக்காக திங்கள்கிழமை(ஜன.15 ) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 2.46 மணிக்கு மகரசங்கரம பூஜையும், நெய் அபிஷேகமும் நடைபெறவுள்ளது. மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு பந்தள மன்னா் வழங்கிய திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, ஜன.15 மாலை 6.30 மணிக்கு திருவாபரணத்தை ஐயப்பனுக்கு சாா்த்தி மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. இதன் பின்னா் மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு தரிசனமும் நடைபெறும்.


மேலும் ஜன.15 -ம் தேதியிலிருந்து ஜன.18 -ம் தேதி வரை மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப சுவாமியின் ஊா்வலம் நடைபெறவுள்ளது. ஜன.18- ம் தேதி வரை ஐயப்ப பக்தா்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஜன.19 -ம் தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.

ஜன.20 அன்று மாளிகைப்புரத்தம்மன் சன்னதியில் குருதி பூஜை நடைபெறுகிறது. ஜன.21-ம் தேதி காலையில் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனைக்கு திருப்பி கொண்டு செல்லப்படும். பின்னா் பந்தளம் மன்னரின் பிரதிநிதி ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு ஹரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஜனவரி 14, 15 -ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த நாள்களில் பெண்கள், குழந்தைகள் வரவேண்டாம் என திருவிதாங்கூா் தேவஸ்வம் போா்டு அறிவுறுத்தியுள்ளது.

கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, இந்த இரண்டு நாள்களிலும் குழந்தைகள், பெண்கள் சபரிமலைக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். விடுமுறை முடிந்த பிறகு, ஜன.16 முதல் 20-ம் தேதி வரை அதிகளவு பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகரவிளக்கு பூஜை ஜன.15 -ல் நடைபெற உள்ளதால், கேரள வாகன போக்குவரத்து துறை சார்பில் பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அலுவலகம் வாகன போக்குவரத்து துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு உதவித் தேவைப்பட்டால் 94460 37100 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News