சீமை கருவேல மரங்களை அகற்றி விவசாயம் செய்தால் ரூ.15 ஆயிரம் மானியம்: வேளாண் அமைச்சர்
சீமை கருவேல மரங்களை அகற்றினால் ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என வேளாண் அமைச்சர் தேனீஜெயக்குமார் அறிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீது உறுப்பினர்கள் பேசியதை தொடர்ந்து துறை அமைச்சர்கள் பதிலளித்தார்கள் புதுச்சேரியில் ரேசன் கடைகளில் சிறுதானியங்களான, கேள்வரகு, சோளம் உள்ளிட்டவைகள் மானிய விலையில் வினியோகிக்கப்படும் எனவும் ரேசன் கார்டு சேவைகள் குறித்த புகார் பெற கால்சென்டர் அமைக்கப்படும் என குடிமைப்பொருள் துறை அமைச்சர் சாய் சரவணன் பேரவையில் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரப்பிரியங்கா போக்குவரத்து துறையில் வாகனங்கள் புதுபித்தல் சான்றிதழ் (FC) எடுக்க ஜி.பி.எஸ், வேககட்டுபாட்டு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்றவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகளில் மாலை நேர ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்றார். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு காரைக்கால் அம்மையார் வளைகாப்பு அணியும் திட்டத்தை ஏற்படுத்தி அரசே அவர்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தும் என அறிவித்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் அரசு பேருந்துகளில் பயணக்கட்டணம் செலுத்த பிரிபெய்டு டிக்கெட் கார்டு அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார் அமைச்சர் சந்திரப்பிரியங்கா.
தொடர்ந்து பேசிய வேளாண்துறை அமைச்சர் தேனீஜெயக்குமார், காரைக்காலில் செயல்படும் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தேசிய அளவில் Star College நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளதாகவும் அதை வேளாண் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும் கோவிட் நோயால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.2,000 மதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும் எனவும் ஊனமுற்ற விதவை பெண்களுக்கு இதுவரை வழங்கி வந்த ரூ.2,000 உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படும் எனவும் காரைக்கால் மாவட்டத்தில் விளைநிலங்களில் படர்ந்து கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றி மீண்டும் சாகுபடிக்கு கொண்டுவருவோருக்கு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என வேளாண் அமைச்சர் தேனீஜெயக்குமார் அறிவித்தார்.