மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் ! முதலமைச்சர் உத்தரவு !!
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ 1000 நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடந்துள்ளதால் சென்னையில் மழை சற்று ஓய்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால் அங்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் நெல்லூர், பிரகாசம், சித்தூர் மற்றும் கடப்பா போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு கூறப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறும் உடனுக்குடன் நிலைமையை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லூர், சித்தூர், கடப்பா மற்றும் பிரகாசம் ஆகிய மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காணொலி காட்சி மூலம் ஆலேசானை செய்தார். மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கவும், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மீட்கப்பட்டு அரசு முகாம்களில் தங்கவைக்கவும் உத்தரவிட்டார்.
மழையினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1,000 ரூபாய் உடனடி நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மையம் அமைக்கவும், மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றவும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுபோல தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ 1000ம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.