தொடர் மழையால் சாலைகள் துண்டிப்பு.. தத்தளிக்கும் கிராமங்கள்

உத்திர பிரதேசத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களின் சாலை தொடர்பை வெள்ளம் துண்டித்துள்ளது.

Update: 2024-07-08 09:03 GMT

உத்திர பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராமங்கள்.

தென்மேற்கு பருவமழையானது வடமாநிலங்களை புரட்டியெடுத்து வருகிறது. இதனால் பல மாநிலங்களின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிளிபிட் மாவட்டத்தில் ஓடும் சாரதா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள இரயில்வே ஆற்றுப்பாலம் ஒன்றை வெள்ள நீர் அடித்துச் சென்ற நிலையில், இரயில் போக்குவரத்து அவ்வழித்தடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால், மாவட்ட தலைநகருடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சாலைவழிப் போக்குவரத்தையும் துண்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

உ.பி., பீகாரில் வெள்ள அபாயம்:

தொடர் கன மழையால் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பீகாரில் மின்னல் தாக்கி 10 பேரும், உத்தரபிரதேசத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஹரியானா மற்றும் பஞ்சாபில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

உத்தரகாண்டில், கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, தகவல் தொடர்பு பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த ஆறு நாட்களாக பெய்து வந்த கன மழை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் குறையத்தொடங்கியது. மழை குறைந்ததன் காரணமாக கிட்டத்தட்ட 30 இணைப்பு வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் மாநிலத்தின் சமவெளிகளில் தொடர்ந்து மழைப்பொழிவு உள்ளது. பலத்த மழையால் குமாவோன் பிரிவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பித்தோராகர் மாவட்டத்தில், சீன எல்லையை இணைக்கும் இரண்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன. தார்ச்சுலா-தவாகாட் பாதையில் உள்ள குஞ்சி பாலம் அச்சுறுத்தலில் உள்ளது. காளி ஆற்றின் நீர்மட்டம் அபாய கட்டத்தை நெருங்கியுள்ளது. சம்பாவத் மாவட்டத்தில், தனக்பூர்-பித்தோராகர் நெடுஞ்சாலை குப்பைகள் காரணமாக இரண்டு இடங்களில் மூடப்பட்டுள்ளது. தொடர் மழையால் இந்த வழித்தடங்களை சீரமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பீகாரில் மழை எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக  ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது. மேற்கு சம்பரன் மாவட்டத்தில் பகாஹா அருகே உள்ள தியாரா பகுதியில் கந்தக் ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் சுமார் 60 பேர் ஒரே இரவில் சிக்கித் தவித்தனர்.

மாநில பேரிடர் மீட்புக் குழு 40 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளது. மேலும் இருபது தொழிலாளர்கள் இன்று மீட்டு அழைத்து வரப்படுவார்கள். மோதிஹரியில், பாக்மதி மற்றும் லால்பகேயா ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. கோசி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கிஷன்கஞ்ச் வழியாக செல்லும் மகாநந்தா மற்றும் கன்கை ஆறுகள் ஆபத்து குறிக்கு அருகில் பாய்கின்றன. கதிஹாரில், மகாநந்தா நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி, பல்ராம்பூர், குஷிநகர் மற்றும் ஷ்ராவஸ்தி மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

உயிரிழப்புகள்:

சீதாபூரில், கூரை மற்றும் தண்டவாளம் இடிந்து விழுந்த சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். பல்ராம்பூரில், ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஷ்ராவஸ்தியின் ஜமுனாஹா தாலுகா பகுதியில், வெள்ளத்தின் போது தங்கள் வயல்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உட்பட 11 விவசாயிகள் எட்டு மணி நேர தீவிர முயற்சிகளுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாராயணி ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை விட 16 செ.மீ உயர்ந்துள்ளது, இதனால் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஐந்து கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த மாநில பேரிடர் மீட்புக் குழு நேற்று இந்த கிராமங்களிலிருந்து 101பேரை மீட்டது. இன்றும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News