சாலை விபத்துக்கள் பெருமளவில் குறைந்தது: போக்குவரத்து அமைச்சகம் தகவல்
2019-ம் ஆண்டைவிட 2020-ம் ஆண்டு சாலை விபத்துக்கள் பெருமளவில் குறைந்தது. மொத்த விபத்துக்களில் சராசரியாக 18.46 சதவீதம் குறைந்தது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் போக்குவரத்து ஆராய்ச்சி பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2016ம் ஆண்டிலிருந்து சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. 2018-ம் ஆண்டு மட்டும் 0.46 சதவீத விபத்து அதிகரித்தது. 2015ம் ஆண்டிலிருந்து காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டைவிட 2020-ம் ஆண்டு சாலை விபத்துக்கள் பெருமளவில் குறைந்தது. மொத்த விபத்துக்களில் சராசரியாக 18.46 சதவீதம் குறைந்தது. விபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12.84 சதவீதமும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 22.84 சதவீதமும் குறைவாக பதிவானது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3,66,138 சாலை விபத்துகள் நேரிட்டன. இதில் 1,31,714 பேர் உயிரிழந்தனர். 3,48,279 பேர் காயமடைந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய பெரிய மாநிலங்களில் சாலை விபத்துக்கள் பெரும் அளவில் குறைந்தது. விபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் குறைந்ததாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.