தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஹைதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்;
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஹைதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதலமைச்சரை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்கவுள்ளார் என்றும் வரும் 7ம் தேதி ஹைதராபாத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அகிய இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," பார்வையாளர்களின் அறிக்கையை பரிசீலித்து, மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடிய பிறகு, தெலுங்கானாவில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியை தேர்ந்தெடுத்து காங்கிரஸ் தலைவர் முடிவு செய்துள்ளார்" என்றார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தீபா தாஸ்முன்ஷி, அஜோய் குமார், கே.ஜே. ஜார்ஜ், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்ரே உள்ளிட்ட 4 பார்வையாளர்களை கட்சி நியமித்துள்ளது.
எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள், துணை முதல்வர்கள் இருப்பார்களா என்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை