கிழக்குக் கடற்படைத் தலைமையகத்தில் குடியரசு தின அணிவகுப்பு
கிழக்குக் கடற்படைத் தலைமையகத்தில் குடியரசு தின அணிவகுப்பு;
73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஐஎன்எஸ் சர்கார்ஸில் உள்ள கிழக்கு கடற்படை தலைமையக அணிவகுப்பு மைதானத்தில் இன்று அணிவகுப்பு நடைபெற்றது.
கிழக்குக் கடற்படைத் தலைமையக தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அனைத்து கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தளங்களைச் சேர்ந்த கடற்படை வீரர்களை உள்ளடக்கிய படைப்பிரிவுகளை அவர் பின்னர் ஆய்வு செய்தார்.
அணிவகுப்பு நடத்தும் அதிகாரியாக வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் இருந்தார். அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். விழாவின் போது கொவிட் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.
காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளை ஒழித்து துணிச்சலை வெளிப்படுத்தியதற்காக நவீன் குமாருக்கு நவ சேனா பதக்கம் வழங்கப்பட்டது. இருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடற்படைக்கு ஆற்றிய ஒட்டுமொத்தப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ராகுல் விலாஸ் கோகலேவுக்கு நவ சேனா பதக்கம் வழங்கப்பட்டது. திறம்பட பங்காற்றிய இதர வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்களிடம் உரையாற்றிய தளபதி, வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். குடியரசு தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், நமது அடிப்படை உரிமைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை அறிந்து கடைப்பிடிப்பதும் முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார்.