தன்வினை தன்னை சுடும்: தீ வைத்த மக்களை திருப்பி தாக்கிய ராவணன்

Dussehra Festival -தசரா கொண்டாட்டத்தில் ராவணனின் உருவ பொம்மையில் பொருத்தப்பட்டிருந்த பட்டாசுகள் சிதறி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்களை நோக்கி சீறி பாய்ந்தன;

Update: 2022-10-06 07:24 GMT

Dussehra Festival -தசரா என்பது இந்த நாளில் இராவணனைக் கொன்றதால், தீமையின் மீது நன்மையின் வெற்றியை நினைவுகூரும் ஆண்டு விழாவாகும். ராவணன், கும்பகர்ணன், மேகநாதர் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து நாடு முழுவதும் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தசரா பண்டிகையன்று ஊரில் உள்ள திடல்களில் வைக்கோல் மற்றும் காகித அட்டைகள், பட்டாசுகளால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உள்ளிட்டவர்களின் உருவ பொம்மையை தீயிட்டு எரிப்பர். அந்த உருவ பொம்மை எரியும் காட்சியை கண்டு மக்கள் பரவசம் கொள்வது வழக்கம். அந்த வகையில், நாடு முழுவதும் தற்போது தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் புதன்கிழமை நடைபெற்ற தசரா விழாவின் போது, ராவணன் உருவத்தில் பொருத்தப்பட்டிருந்த பட்டாசுகள் பார்வையாளர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. இதைக் கண்டு பீதியடைந்த மக்கள், அதிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல்துறையினரும் செய்வதறியாமல் திகைத்தவாறு ஓடினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது, 

இந்த பட்டாசு கலவரம் முடிவதற்குள்ளாகவே, அந்த மைதானத்துக்குள் முரட்டுத்தனமாக பாய்ந்துவந்த காளை ஒன்று நிலவரத்தை மேலும் கலவரமாக்கியது. உடனடியாக காவல்துறையினர் காளையை பிடித்து அழைத்துச் சென்றனர்.

இதேபோல், அரியானா மாநிலத்தின் யமுனாநகரில் நேற்று நடைபெற்ற தசரா விழாவில் எரிந்து கொண்டிருந்த ராவணனின் உருவபொம்மை பொதுமக்கள் இருந்த பகுதியை நோக்கி சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, மக்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நேரவில்லை.

தசரா மைதானத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. எரிக்கப்பட்ட ராவணன் உருவ பொம்மை தரையில் விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News