நவீன தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னேறுகிறது -மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
பெங்களூருவிலுள்ள ஐபிஎம் அலுவலகத்தை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டார்
பெங்களூருவிலுள்ள ஐபிஎம் அலுவலகத்தை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டார்.
வேகமாக டிஜிட்டல் மயமாகி வரும் உலகத்தில் சைபர் பாதுகாப்பு, கலப்பு மேகக் கணினியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களில் முன்னேறி செல்வதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
பெங்களூருவிலுள்ள ஐபிஎம் இந்தியா அலுவலகத்தை பார்வையிட்ட அமைச்சர், புதுமைகள் மற்றும் வளர்ச்சியின் மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத்தை நனவாக்க மேற்கண்ட தொழில்நுட்பங்களில் நமக்கு முதலீடுகள் தேவை என்று அவர் கூறினார்.
ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் பல்வேறு அமைப்புகளின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு வழங்கி வரும் தொழில்நுட்ப சேவைகள் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்காக அந்நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தை பார்வையிட்ட அமைச்சர், தமது பயணம் பயனுள்ளதாக இருந்தது என்று கூறினார்.
ஐபிஎம் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதி நிர்வாக இயக்குநர் திரு சந்திப் படேல் மற்றும் அவரது குழுவினரை சந்தித்த ராஜீவ் சந்திரசேகர், நிறுவனத்தின் மூத்த பணியாளர்களுடன் உரையாடியதோடு அவர்களது பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 30 வருடத்துக்கும் மேலான அனுபவம் உள்ள தொழில்நுட்ப வல்லுநர் ராஜீவ் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎம் அலுவலகத்திற்கு அமைச்சரை வரவேற்ற திரு சந்திப் படேல், அமைச்சர் வருகை புரிந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ஐபிஎம் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு மையம் மற்றும் வாடிக்கையாளர் புதுமை மையம் குறித்த அனுபவத்தை அமைச்சருக்கு வழங்கியது குறித்து பெருமை கொள்வதாகவும் கூறினார். பாதுகாப்பான, நம்பிக்கை மிகுந்த மற்றும் பொறுப்புணர்வு மிக்க இணையத்திற்கான தேவை குறித்து அமைச்சர் வலியுறுத்தினர்.