ராகுல் காந்தி 2ம் கட்ட ஜோடோ யாத்திரை துவங்க திட்டம்

ராகுல் காந்தி, குஜராத் முதல் மேகாலயா வரை, தனது 2ம் கட்ட ஜோடோ யாத்திரையை துவக்க உள்ளதாக, பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-08-09 02:43 GMT

மீண்டும் பாத யாத்திரையை துவங்குகிறார் ராகுல்காந்தி (கோப்பு படம்)

Rahul Gandhi,start 2nd phase of Jodo Yatra- குஜராத் முதல் மேகாலயா வரை இரண்டாம் கட்ட பாரத் ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை எகிற வைத்துள்ளது.


காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை எனும் பெயரிலான நாடு தழுவிய நடைபயணத்தை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7, 2022 அன்று தொடங்கினார். ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஜனவரி 30, 2023 அன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் முடிவடைந்தது.

தமிழ்நாட்டின் குமரி முனையில் தொடங்கிய இந்த பாதயாத்திரை, கேரளா, கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களை கடந்து ஜம்மு-காஷ்மீரில் நிறைவு பெற்றது. மொத்தமாக 137 நாட்களில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களைக் கடந்து 3,800 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை இந்த பாதயாத்திரையில் கடந்தார் ராகுல் காந்தி.


ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையின்போது ஏராளமான அரசியல் பிரமுகர்களும், பல்வேறு துறையினரும் ராகுல் காந்தியோடு இணைந்தனர். இந்த பாதயாத்திரை நாடு முழுவதும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுப்பதாக அமைந்தது.  பாதயாத்திரை முடிவடைந்து சில வாரங்கள் கடந்த நிலையில், அவதூறு வழக்கு ஒன்றில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவரது எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளதால், மீண்டும் எம்.பி ஆகியுள்ளார் ராகுல் காந்தி. இதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்து விவாதத்தில் பங்கேற்றார் ராகுல் காந்தி.

தற்போது, ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ யாத்திரை 2.0'-வை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதற்காக, பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பரில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ராகுல் காந்தி மீண்டும் தனது பாதயாத்திரையை செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.


குஜராத், மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால், காந்தி பிறந்த இடமான போர்பந்தரில் இருந்து ராகுல் தனது இரண்டாவது யாத்திரையை தொடங்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் இன்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து, குஜராத் முதல் மேகாலயா வரை 2-வது கட்டமாக பாரத் ஜோடோ யாத்திரைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மேலும், மகாராஷ்டிராவில் யாத்திரைக்கான ஆயத்தப் பணிகளாக, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 48 கட்சி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக படோல் கூறினார். இந்த பார்வையாளர்கள் ஆறு நாட்களுக்குள் கள நிலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார்கள், அதன் பிறகு ஆகஸ்ட் 16ம் தேதி ஒரு முக்கிய குழு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். 

முக்கிய குறிப்பு; செய்தியில் இடம்பெற்ற அனைத்தும் கோப்பு படங்கள்

Tags:    

Similar News