புதுச்சேரியில் சேவல் சண்டை: ஐந்து நாளாக சேவலை பராமரிக்கும் காவல்துறை

புதுச்சேரியில் சேவல் சண்டை நடத்தியவர்களுக்கு ஜாமீன் கிடைத்தாலும், சேவல்களுக்கு ஜாமீன் கிடைக்காததால் காவல் நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்

Update: 2023-01-19 17:02 GMT

புதுச்சேரி காவல்நிலைய கூண்டுக்குள் சிறைபட்டுள்ள சேவல்கள்

புதுச்சேரியில் அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்து ஜாமீனில் வெளியே அனுப்பினர். அவர்கள் சண்டைக்கு பயன்படுத்திய சேவல்களை காவல்துறையினர் கைது(?) செய்து கடந்த ஐந்து நாட்களாக காவல் நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்

புதுச்சேரி தேங்காய்திட்டில் பொங்கல் பண்டிகையன்று பந்தயம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. முதலியார்பேட்டை காவல்துறையினர் விரைந்து சென்று பார்த்த போது திலகர் நகரை சேர்ந்த சின்னதம்பி, பிரதாப் ஆகியோர் சேவல் பந்தையம் நடத்தியது தெரியவந்தது.

சண்டையில் எந்த சேவல் ஜெயிக்கும் என கேட்டு பந்தையமாக பணம் வைத்து ஒரு கூட்டமே விளையாடியது தெரியவந்தது. காவலர்களை கண்டவுடன் அனைவரும் தப்பி ஓடினார்கள். இருப்பினும், பந்தயம் நடத்திய சின்னதம்பி, பிரதாப் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் சேவல்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. ஐந்து நாட்களாய் அவை முதலியார்பேட்டை காவல் நிலைய நுழைவு வாயிலில் கூண்டில் வைக்கப்பட்டுள்ளது. வழக்கு முடியும் வரை சேவல்களை பராமரிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு என்பதால் கடந்த ஆறு நாட்களாய் ஜாவா, கலிவா, கதிர், யாகத் ஆகிய பெயர்களை கொண்ட சேவல்களூக்கு நீரும் தீனியும் வைத்து பராமரித்து வருகின்றனர்.

நாளை நீதிமன்றத்தில் சேவல்களை ஆஜர் படுத்த உள்ளனர். உரிமையாளருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சேவல்களுக்கு ஜாமீன் வழங்கினால் மட்டுமே விடுவிக்கப்படும் என காவல்துறையினர் கறாராக தெரிவித்தனர்.

Tags:    

Similar News