இன்று பெங்களூருவில் தனியார் வாகனங்கள் பந்த்: காரணங்கள் என்ன?
இன்று பெங்களூரு பந்த்தை சமாளிக்க கர்நாடக போக்குவரத்து துறை மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.;
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கும் ஆளும் காங்கிரஸின் தேர்தலுக்கு முந்தைய ஐந்து உத்தரவாதங்களில் ஒன்றான சக்தி திட்டத்தை எதிர்த்து கர்நாடக மாநில தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் பெங்களூரு நகரில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது . இந்தத் திட்டம் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாக தனியார் போக்குவரத்து ஊழியர்கள் கூறுகின்றனர்.
கூட்டமைப்பில் மொத்தம் 32 தனியார் போக்குவரத்து சங்கங்கள் உள்ளன, மேலும் பெரும்பாலான தனியார் போக்குவரத்து சேவைகள் வேலைநிறுத்தத்தின் போது கிடைக்க வாய்ப்பில்லை.
தனியார் பேருந்து, டாக்சி, ஆட்டோ தொழிற்சங்கங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள்கிழமை நள்ளிரவு வரை வேலைநிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி பொதுமக்கள் திட்டமிடுமாறு பெங்களூரு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தனியார் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்துவது ஏன்?
பைக் டாக்சிகளை தடை செய்யக் கோரியும், சக்தி திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பு பந்த் நடத்துகிறது.
சக்தி திட்டத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தங்கள் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றவில்லை என்றும் தனியார் போக்குவரத்து ஊழியர்கள் கூறினர்.
போராட்டத்தை சமாளிக்க கர்நாடக போக்குவரத்து துறை மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது. பந்த் நாளில் ஏராளமான பேருந்துகளை இயக்க மாநில போக்குவரத்துத் துறை தயாராகி வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் வகையில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக (பிஎம்டிசி) பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் உறுதியளித்தார்.
பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்காக பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளோம். சுமார் 500 கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. போராட்டம் செய்வதால் எதுவும் நடக்காது. அவர்கள் வேலைநிறுத்தம் செய்யட்டும் அவர்களை விடுங்கள், அவ்வாறு செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது" என்று ரெட்டி கூறினார்.
பெங்களூருவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வழித்தடங்களில் அரசு பேருந்துகளை இயக்குமாறு போக்குவரத்து அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நோயாளிகள் எந்தப் பிரச்னையும் சந்திக்காத வகையில் மருத்துவமனைகளுக்கு அருகில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
ஆட்டோக்கள், டாக்சிகள், விமான நிலைய டாக்சிகள், மேக்சி வண்டிகள், சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்கள், ஸ்டேஜ் கேரேஜ்கள், ஒப்பந்த வண்டிகள் மற்றும் கார்ப்பரேட் பேருந்துகள் உட்பட சுமார் 7 முதல் 10 லட்சம் வாகனங்கள் நிறுத்தப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர் எஸ் நடராஜ் சர்மா தெரிவித்தார்.