அசாம் படகு விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை
உள்நாட்டு நீர் போக்குவரத்து துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் பணியில் அலட்சியமாக இருந்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் மாவட்டத்தில், பிரம்மபுத்திரா நதியில் நேற்று இரண்டு படகுகள் நேருக்கு நேராக மோதி கவிழ்ந்தன.
இந்த விபத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணியில் கிட்டத்தட்ட 87 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்; ஒருவர் உயிரிழந்துள்ளார். 7 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே தேசிய மற்றும் அசாம் மாநில பேரிடர் மீட்புப்படை இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்திய இராணுவமும் இந்த மீட்புப்பணிகளில் இன்று களமிறங்கவுள்ளது. இந்த சம்பவத்தால் அசாமின் உள்நாட்டு நீர் போக்குவரத்து துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் பணியில் அலட்சியமாக இருந்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அசாமில் நிகழ்ந்த படகு விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். பயணிகளை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "அசாமில் நிகழ்ந்த படகு விபத்து குறித்து அறிந்து கவலை அடைந்தேன். பயணிகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.