சூரத் வைரக் கண்காட்சியை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் சூரத்தில் சூரத் வைரக் கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.;

Update: 2023-12-17 14:39 GMT

குஜராத் மாநிலம் சூரத்தில் சூரத் வைரக் கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக, பஞ்சதத்வா தோட்டத்திற்குச் சென்று, சூரத் வைர வணிக மையம் மற்றும் ஸ்பைன் -4-ன் பசுமைக் கட்டிடத்தைப் பிரதமர் பார்வையிட்டார். பார்வையாளர் கையேட்டில் கையெழுத்திட்டார். முன்னதாக சூரத் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், சூரத் நகரத்தின் பிரம்மாண்டத்திற்கு ஒரு புதிய வைரம் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். "இது ஒரு சாதாரண வைரம் அல்ல, உலகின் மிகச் சிறந்தது" என்று கூறிய மோடி, சூரத் வைர வணிக மையத்தின் பிரகாசம் உலகின் மிகப்பெரிய வைரங்களை மறைக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். திரு வல்லபாய் லக்கானி, திரு லால்ஜிபாய் படேல் ஆகியோரின் பணிவு மற்றும் இத்தகைய பெரிய திட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் அனைவரையும் அழைத்துச் செல்லும் உத்வேகம் ஆகியவற்றைப் பாராட்டிய அவர், இந்த நிகழ்வில் சூரத் வைர வணிக மையத்தின் ஒட்டுமொத்தக் குழுவையும் பாராட்டினார்.

"சூரத் வைர வணிக மையம் இப்போது உலகின் வைர பங்குச்சந்தைகள் குறித்த விவாதங்களின் போது இந்தியாவின் பெருமையுடன் முன்னணிக்கு வரும்" என்று அவர் தெரிவித்தார். "சூரத் வைர வணிக மையம் இந்திய வடிவமைப்புகள், வடிவமைப்பாளர்கள், பொருட்கள் மற்றும் கருத்தாக்கங்களின் திறன்களை வெளிப்படுத்துகிறது. இந்தக் கட்டிடம் புதிய இந்தியாவின் திறன்கள் மற்றும் தீர்மானங்களின் அடையாளமாகும். சூரத் வைர வணிக மையத்தைத் திறந்து வைத்ததற்காக ஒட்டுமொத்த வைரத் தொழிலுக்கும், சூரத், குஜராத் மற்றும் இந்திய மக்களுக்கும் திரு. மோடி வாழ்த்து தெரிவித்தார்.

சூரத் வைர வணிக மையத்தில் இன்று தனது நடைபயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் பசுமை கட்டிடம், கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் மாணவர்கள் கற்றலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் கட்டிடத்தின் ஒட்டுமொத்த கட்டிடக்கலை, நிலத்தோற்றத்தில் ஒரு பாடத்திற்கு எடுத்துக்காட்டாக பயன்படுத்தப்படும் பஞ்சதத்வா தோட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.

சூரத்திற்கான மற்ற இரண்டு பரிசுகள் குறித்துப் பேசிய பிரதமர், சூரத்தில் ஒரு புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்ததையும், சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உயர்த்துவதையும் குறிப்பிட்டார். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். சூரத் - துபாய் விமானப் போக்குவரத்து தொடங்குவது குறித்தும், ஹாங்காங்கிற்கு விரைவில் தொடங்கவிருக்கும் விமானம் குறித்தும் அவர் தெரிவித்தார். "சூரத்துடன், குஜராத் இப்போது மூன்று சர்வதேச விமான நிலையங்களைக் கொண்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

சூரத் நகரத்துடனான தனது தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் கற்றல் அனுபவங்களை எடுத்துரைத்த பிரதமர், அனைவரும் இணைவோம், அனைவரின் முயற்சி என்ற உணர்வு பற்றிக் குறிப்பிட்டார். "சூரத்தின் மண் அதை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது" என்று கூறிய திரு மோடி, இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி ஒப்பிட முடியாதது என்று கூறினார். சூரத்தின் ஏற்றத் தாழ்வுகள் பயணத்தை எடுத்துரைத்த பிரதமர், ஆங்கிலேயர்கள் முதன்முதலில் இந்தியாவுக்கு வந்தபோது சூரத்தின் பிரம்மாண்டம் அவர்களை ஈர்த்தது என்று கூறினார்.

உலகின் மிகப்பெரிய கப்பல்களின் உற்பத்தி மையமாக சூரத் இருந்த காலத்தை அவர் நினைவு கூர்ந்தார். சூரத் துறைமுகம் 84 நாடுகளைச் சேர்ந்த கப்பல்களின் கொடிகளை ஏற்றும். "இப்போது, அந்த எண்ணிக்கை 125 ஆக உயரும்", என்று அவர் மேலும் கூறினார். நகரம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துரைத்த பிரதமர், கடுமையான உடல்நலக் கோளாறுகள் மற்றும் வெள்ளம் பற்றிக் குறிப்பிட்டார். இன்றைய நிகழ்வு பற்றி நம்பிக்கை தெரிவித்த பிரதமர், உலகில் வளர்ந்து வரும் முதல் 10 நகரங்களில் ஒன்றாக சூரத் மாறியுள்ளது என்றார்.

சூரத்தின் சிறந்த தெரு உணவு, தூய்மை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். முன்பு சன் சிட்டி என்று அழைக்கப்பட்ட சூரத், அதன் மக்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக வைர நகரம், பட்டு நகரமாகத் தன்னை மாற்றிக் கொண்டது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "இன்று, சூரத் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு நகரமாக உள்ளது", என்று அவர் வியந்தார். தகவல் தொழில்நுட்பத் துறையில் சூரத்தின் முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட அவர், சூரத் போன்ற ஒரு நவீன நகரம் வைர வணிக மைய வடிவத்தில் அற்புதமான கட்டிடத்தைப் பெற்றது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றார்.

மோடியின் உத்தரவாதம் சூரத் மக்களுக்கு நீண்ட காலமாகவே தெரியும் என்றும், மோடியின் உத்தரவாதத்திற்கு இந்த வைரச் சந்தை ஓர் எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறினார். வைர வர்த்தகத்துடன் தொடர்புடைய மக்களுடன் தனது உரையாடலை நினைவுகூர்ந்த பிரதமர், வைரத் தொழிலுக்கான சிறப்பு மண்டலங்கள் அறிவிக்கப்பட்ட 2014-ம் ஆண்டு தில்லியில் நடந்த உலக வைர மாநாடு ஆகியவற்றை நினைவு கூர்ந்த பிரதமர், இந்தப் பயணம் சூரத் வைர வணிக மைய வடிவத்தில் ஒரு பெரிய வைர மையத்திற்கு வழிவகுத்துள்ளது. இது வைர வர்த்தகத்தின் பல அம்சங்களை ஒரே கூரையின் கீழ் சாத்தியமாக்கியுள்ளது என்றார்.

"கைவினைஞர், தொழிலாளி, தொழிலதிபர் என அனைவருக்கும் சூரத் வைர வணிக மையம் ஒரு நிறுத்தக் கடையாக மாறியுள்ளது", என்று அவர் மேலும் கூறினார். சர்வதேச வங்கி, பாதுகாப்பான பெட்டகங்கள், நகை வணிக வளாகம் போன்ற வசதிகள் இந்த மையத்தில் இருக்கும், இது 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

சூரத்தின் திறன்கள் குறித்துப் பேசிய பிரதமர், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று குறிப்பிட்டார். "இப்போது, மூன்றாவது இன்னிங்ஸில், இந்தியா உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை மோடி வழங்கியுள்ளார்", என்று அவர் கூறினார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை அரசு கொண்டுள்ளது. மேலும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆகிய இலக்குகளில் செயல்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் வைரத் தொழில் இதில் பெரும் பங்கு வகிக்கும் என்றார். நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதில் சூரத்தின் பங்கை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராயுமாறு தொழில்துறை தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார். வைர நகைகள் ஏற்றுமதி, வெள்ளி வெட்டு வைரங்கள், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்கள் ஆகியவற்றில் இந்தியாவின் முன்னணி இடத்தைக் குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த உலகளாவிய நவரத்தினங்கள்-ஆபரண ஏற்றுமதியில், இந்தியாவின் பங்கு வெறும் 3.5 சதவீதம் மட்டுமே என்பதையும் சுட்டிக்காட்டினார்.

"சூரத் முடிவு செய்தால், நவரத்தினங்கள்-ஆபரண ஏற்றுமதியில் நமது பங்கு இரட்டை இலக்கத்தை எட்டும்" என்று கூறிய பிரதமர், இந்தத் துறைக்கு அரசின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். ஏற்றுமதி மேம்பாட்டிற்கான மையமாக இத்துறையை அறிவித்தல், காப்புரிமை பெற்ற வடிவமைப்பை ஊக்குவித்தல், ஏற்றுமதிப் பொருட்களைப் பல்வகைப்படுத்துதல், சிறந்த தொழில்நுட்பத்திற்கான ஒத்துழைப்பு, ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட அல்லது பசுமை வைரங்களை ஊக்குவித்தல். பட்ஜெட்டில் பசுமை வைரங்களுக்கான சிறப்பு ஒதுக்கீடுகள் போன்ற நடவடிக்கைகளை அவர் குறிப்பிட்டார். இந்தியா குறித்த நேர்மறையான உலகளாவிய பார்வை மற்றும் 'மேக் இன் இந்தியா' பிராண்டின் வளர்ந்து வரும் மதிப்பு ஆகியவற்றால் இத்துறை பயனடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சூரத் நகரில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் மக்களின் திறனை மேம்படுத்த அரசு சூரத்தின் திறனை அதிகரித்து வருவதாகப் பிரதமர் கூறினார். சூரத்தின் இணைப்பை எடுத்துரைத்த திரு மோடி, சூரத் சர்வதேச விமான நிலையம், மெட்ரோ ரயில் சேவை, ஹசிரா துறைமுகம், ஆழ்கடல் எல்.என்.ஜி முனையம் உள்ளிட்ட சூரத்தின் துறைமுகங்கள் பற்றிக் குறிப்பிட்டார். சூரத் தொடர்ந்து சர்வதேச வர்த்தக மையங்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது. உலகில் மிகச் சில நகரங்கள் மட்டுமே இத்தகைய சர்வதேச இணைப்பைக் கொண்டுள்ளன", என்று அவர் மேலும் கூறினார்.

புல்லட் ரயில் திட்டத்துடன் சூரத்தின் இணைப்பு, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவுக்கு சூரத்தின் ரயில் இணைப்பை வலுப்படுத்தும் மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் நடந்து வரும் பணிகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். தில்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை சூரத்தின் வணிகத்திற்குப் புதிய வாய்ப்புகளை வழங்கவிருக்கிறது. நகரின் நவீன இணைப்பை அனைவரும் அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், "சூரத் முன்னேறினால், குஜராத் முன்னேறும். குஜராத் முன்னேறினால் நாடு முன்னேறும்" என்று கூறி உரையை நிறைவு செய்த பிரதமர், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டிற்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

குஜராத் ஆளுநர் திரு. ஆச்சார்யா தேவ்ரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய அமைச்சர்கள் திரு மன்சுக் மாண்டவியா மற்றும் திரு புருஷோத்தம் ரூபாலா, மத்திய இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர்.பாட்டீல், சூரத் வைர வணிக மையத் தலைவர் திரு வல்லபபாய் லக்கானி தர்மானந்தன் வைர நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீ லால்ஜிபாய் படேல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சூரத் வைர வணிக மையம், சர்வதேச வைரம் மற்றும் ஆபரண வர்த்தகத்திற்கான உலகின் மிகப்பெரிய, அதி நவீன மையமாக இருக்கும். பட்டைதீட்டப்படாத மற்றும் பட்டைதீட்டப்பட்ட வைரங்கள், ஆபரணங்கள் ஆகிய இரண்டையும் வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய மையமாக இது இருக்கும். இறக்குமதி - ஏற்றுமதிக்கான அதிநவீன 'சுங்க அனுமதி மாளிகை'யை பங்குச் சந்தை கொண்டிருக்கும்; சில்லறை நகை வணிகத்திற்காக ஒரு நகை வணிக வளாகம் மற்றும் சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்பான பெட்டகங்களுக்கான வசதியும் இடம் பெற்றிருக்கும்.

Tags:    

Similar News