தேசிய வாக்காளர் தினம்: குடியரசுத்தலைவர் இன்று விருது வழங்கல்

14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் தின விருதுகளைக் குடியரசுத்தலைவர் இன்று வழங்குகிறார்.;

Update: 2024-01-25 00:55 GMT

இந்தியத் தேர்தல் ஆணையம் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை இன்று  (25.01.2024) கொண்டாடுகிறது. புதுடெல்லியில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள விழாவில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள் ‘வாக்களிப்பது போல் எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிப்பேன்' என்பதாகும்.

இந்த நிகழ்ச்சியின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்குவார். தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகள், பாதுகாப்பு மேலாண்மை, தேர்தல் மேலாண்மை, எளிமையான தேர்தல், வாக்காளர் விழிப்புணர்வு போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

தேர்தல் ஆணையத்தின் வெளியீடான 'பொதுத் தேர்தல்கள் 2024-க்கான தேர்தல் ஆணையத்தின் முன்முயற்சிகள்' என்ற நூல் தொகுப்பின் முதல் பிரதியைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குடியரசுத்தலைவரிடம் வழங்குவார். தேர்தல்களை சுதந்திரமாகவும், நியாயமாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வகையிலும், நடத்துவதை உறுதி செய்வதற்காகத் தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு பிரிவும் மேற்கொண்ட முயற்சிகளின் விரிவான கண்ணோட்டத்தை இந்த நூல் வழங்குகிறது.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் தயாரித்த 'எனது வாக்கு எனது கடமை' என்ற வாக்காளர் விழிப்புணர்வு குறும்படமும் இந்த நிகழ்ச்சியின் போது திரையிடப்படுகிறது.

நாளை (25.01.2024), இந்தியத் தேர்தல் ஆணையம் தனது 75-வது ஆண்டைக் கொண்டாடுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தைக் குறிக்கும் வகையிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டும் "அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்கள்" என்ற கருப்பொருளில் நினைவு அஞ்சல் தலை ஒன்றும் வெளியிடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வுக்கான புதுமையான மல்டிமீடியா ஊடகப் பிரச்சாரமும் தொடங்கப்படுகிறது..

2011-ஆம் ஆண்டு முதல், இந்தியத் தேர்தல் ஆணையம் ஜனவரி 25-ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடுகிறது. 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது.

தேசிய, மாநில, மாவட்ட, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி அளவில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.

Tags:    

Similar News