ராணி எலிசபெத் இறுதி சடங்கு: குடியரசு தலைவர் பங்கேற்பு

ராணி எலிசபெத் இறுதி சடங்கு நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு பங்கேற்கவுள்ளார்.

Update: 2022-09-14 12:13 GMT

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

வரும் 19-ஆம் தேதி நடக்கவுள்ள ராணி இரண்டாம் எலிசபெத் இறுதி நிகழ்வில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கவுள்ளார். இதற்காக, இம்மாதம் 17-ஆம் தேதி லண்டன் செல்லும் திரவுபதி முர்மு இந்திய அரசு சார்பாக துக்க நிகழ்வில் பங்கேற்கிறார். இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில், "இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவின் மூலம் உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்துவிட்டது. 70 வருடங்களுக்கு மேலாக அவர் தனது நாட்டையும் மக்களையும் வழிநடத்தியிருக்கிறார். இங்கிலாந்து மக்களின் துயரத்தில் பங்குகொள்வதுடன்,அரசக் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

Tags:    

Similar News