குடும்பப் பிரச்னையால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தூக்கிட்டு தற்கொலை
குடும்பப் பிரச்னையால் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நடராஜன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 66). இவர், புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் 1991 ஆம் ஆண்டு மற்றும் 1996 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக 10 ஆண்டுகள் இருந்தவர் ஆவார்.
வில்லியனூர் பகுதியில் வசித்து வந்த நடராஜன் தனது வீட்டில் தனியாக இருந்தபோது இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், காலை முதல் அவர் வீட்டில் இருந்து வெளியே வராத நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது அவர் தனது அறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்தாராம்.
இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வில்லியனூர் போலீஸார் தற்கொலை செய்துக் கொண்ட நடராஜனின் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாகவே நடராஜன் வீட்டில் தனியாக இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், நடராஜின் வாரிசுகள் அவரது சொத்துகளை பிரித்துக் கொண்டு சென்றதாகவும் அதன் காரணமாகவே மன உளைச்சலில் இருந்த நடராஜன் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தற்கொலை செய்துக் கொண்ட நடராஜன் கடந்த 1991 முதல் 2001 வரை 10 ஆண்டுகளாக அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுகவின் மாநில செயலாளராகவும் இருந்தார். பிறகு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார்.
தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வில்லியனூர் தொகுதியிலும், 2016 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் மங்களம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்கொலை செய்துக் கொண்ட நடராஜன் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து வந்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரி அரசியல் கட்சியினர், அதிமுகவினர் மற்றும் வில்லியனூர் தொகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.