தூய்மை இந்தியா இயக்கம் 2.0 & அம்ருத் 2.0 நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
‘கழிவுகள் இல்லாத’ நகரங்கள், ‘தண்ணீர் பாதுகாப்புடன்’ நகரங்கள் அமைவதற்கு ஏற்ற திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.;
தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 மற்றும் புதுப்பித்தல் மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் இயக்கம் (அம்ருத்) ஆகியவற்றை புதுதில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நாளை (அக்டோபர் 1) காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, 'கழிவுகள் இல்லாத' மற்றும் 'தண்ணீர் பாதுகாப்புடன்' அனைத்து நகரங்களையும் மாற்றும் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் இந்த இரு இயக்கங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவை துரிதமாக நகரமயமாக்குவதில் ஏற்படும் சவால்களை சிறப்பாக எதிர்கொள்வதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இந்த இயக்கங்கள் அமைந்துள்ளன. நிலையான வளர்ச்சி இலக்குகள் 2030-ஐ அடைவதற்கும் இவை உதவிகரமாக இருக்கும்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர், இணை அமைச்சர் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 பற்றி:
'கழிவுகள் இல்லாத' நிலையை அனைத்து நகரங்களிலும் ஏற்படுத்துவது, அம்ருத் இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்படாத அனைத்து நகரங்களிலும் கழிவு நீர் மேலாண்மையை உறுதிசெய்வது, திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் (ஓடிஎஃப்+), ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகர்ப் பகுதிகளிலும் (ஓடிஎஃப்++) ஏற்படுத்துவது ஆகியவற்றின் மூலம் நகரங்களில் பாதுகாப்பான துப்புரவு பணிகளை மேற்கொள்ள தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 திட்டமிட்டுள்ளது. திடக் கழிவுகளின் ஆதாரங்களை தரம் பிரித்தல், 3 ஆர் (R) சொற்களின் (குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி) கொள்கைகளை பின்பற்றுவது, அனைத்து விதமான திடக்கழிவுகளையும் அறிவியல் ரீதியாக அகற்றுவது மற்றும் பயனுள்ள திடக்கழிவு மேலாண்மைக்கு மரபுசார் கழிவு இடங்களை சரி செய்தல் போன்றவற்றில் இந்த இயக்கம் கவனம் செலுத்தும். இந்த இயக்கத்திற்காக சுமார் ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்ருத் 2.0 பற்றி:
2.68 கோடி தண்ணீர் இணைப்புகளை வழங்கி 4700 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100% தண்ணீர் இணைப்புகளை வழங்குவது மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் 10.5 கோடி மக்கள் பயனடையும் வகையில் 500 அம்ருத் நகரங்களில் சுமார் 2.64 கோடி கழிவுநீர் இணைப்புகளை வழங்கி 100% கழிவுநீர் வசதிகளை உருவாக்குவது ஆகியவை அம்ருத் 2.0 இயக்கத்தின் நோக்கமாகும். சுழற்சி பொருளாதாரத்தின் கொள்கைகளைப் பின்பற்றி நிலத்தடி நீர் மற்றும் நீர் வளங்களின் பாதுகாப்பு மற்றும் புத்தாக்கத்தை இந்த இயக்கம் ஊக்குவிக்கும். நவீன சர்வதேச தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களை பயன்படுத்துவதற்காக நீர் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப துணை இயக்கத்தில் தரவுகள் சார்ந்த ஆளுகைக்கு இந்த இயக்கம் ஆதரவளிக்கும். நகரங்கள் இடையே வளர்ச்சிக்கான போட்டியை ஊக்குவிப்பதற்காக குடிநீர் ஆய்வு நடத்தப்படும். இந்த இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை சுமார் ரூ.2.87 லட்சம் கோடி.
தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) மற்றும் அம்ருத் இயக்கங்களினால் ஏற்படும் தாக்கம்:
கடந்த ஏழு ஆண்டுகளில் நகர்ப்புற தோற்றத்தை மேம்படுத்துவதில் தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) மற்றும் அம்ருத் இயக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. மக்களுக்குத் தண்ணீர் விநியோகம் மற்றும் துப்புரவு ஆகிய அடிப்படை சேவைகள் வழங்குவதை இந்த இரண்டு முக்கிய இயக்கங்கள் மேம்படுத்தி உள்ளன. தூய்மை, தற்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லாததாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன் 70% திடக்கழிவுகள் அறிவியல் ரீதியாக தற்போது அப்புறப்படுத்தப்படுகின்றன. 1.1 கோடி வீடுகளுக்கு தண்ணீர் குழாய் இணைப்புகளையும், 85 லட்சம் கழிவுநீர் இணைப்புகளையும் வழங்குவதன் மூலம் தண்ணீர் பாதுகாப்பை அம்ருத் இயக்கம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள்.