டெல்லி-மும்பை விரைவுச்சாலை: பிரதமர் மோடி இன்று திறப்பு
இந்தியாவின் மிக நீண்ட விரைவுச் சாலையான டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் கட்டத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்;
1,386 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்படும் டெல்லி-மும்பை விரைவுச் சாலை இந்தியாவின் மிக நீண்ட விரைவுச் சாலையாகும். இது டெல்லி-மும்பை இடையிலான பயண நேரத்தை 50 சதவீதம் குறைக்கும். இந்தச் சாலை டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய 6 மாநிலங்கள் வழியாக செல்லும்.
கோட்டா, இந்தூா், ஜெய்ப்பூா், போபால், வதோதரா, சூரத் போன்ற நகரங்களை இணைக்கும். முக்கியமான 8 விமான நிலையங்கள், 13 துறைமுகங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு முக்கிய பங்களிக்கும்.
ராஜஸ்தானின் தௌசாவில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் சொஹ்னா-தௌசா பாதையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் இடையேயான பயண நேரத்தை தற்போதைய 5 மணி, 40 நிமிட பயணத்தில் இருந்து மூன்று மணிநேரமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படும் சோஹ்னா-தௌசா பாதை, டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் சுமையை குறைக்கும் மற்றும் குர்கான், நூஹ் இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் டெல்லி - மும்பை விரைவுச் சாலையில் சோஹ்னா அருகே உள்ள போக்குவரத்து மேலாண்மை மையத்தை பார்வையிடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திறப்பு விழாவைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் சோஹ்னா-தௌசா பாதை போக்குவரத்துக்காக திறக்கப்படும் என்று NHAI அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹரியானாவில் சோஹ்னா மற்றும் ராஜஸ்தானின் தௌசா இடையேயான விரைவுச் சாலை டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் கட்டமாகும். ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் எக்ஸ்பிரஸ்வே பிராந்தியத்தின் சந்தைக்கு ஊக்கமளிக்கும், வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் வீட்டுவசதி மற்றும் வணிகத் திட்டங்களுக்கான தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.