பிரதமர் மோடி நாளை திருப்பதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி நாளை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

Update: 2023-11-25 04:35 GMT

பைல் படம்

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி நாளை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (26-ம் தேதி) வருக்கிறார். பிரதமர் மோடி புதுடெல்லியிலிருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமானத்திற்கு மாலை 6.55 மணிக்கு வந்திறங்குகிறார். பிரதமர் மோடியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர், கலெக்டர் பரமேஸ்வரர் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கோத்துக் கொடுத்து வரவேற்கின்றனர்.

இதனையடுத்து விமான நிலையத்திலிருந்து கார் மூலம் திருமலைக்கு செல்கிறார். அன்று இரவு திருமலையில் உள்ள ரச்சனா விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், திங்கட்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து காலை 10.25 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி மீண்டும் விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

திருப்பதி வருகையையொட்டி அவர் தங்கவுள்ள ரச்சனா விருந்தினர் மாளிகையை மத்திய மற்றும் மாநில உளவுத்துறை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். மேலும் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரேணி குண்டா விமான நிலையத்திலிருந்து திருமலை வரையுலும் மத்திய உளவுத்துறை சோதனை மேற்கொண்டனர். திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27ம் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அதற்கு முந்தைய நாள் அதாவது 26ம் தேதி பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News