தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2021, 2022 ஆம் ஆண்டுகளின் விருதாளர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பிளாக்செயின் எனப்படும் இணைய வழி ஆவண பரிமாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2021, 2022 ஆம் ஆண்டுகளின் விருதாளர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விருதாளர்களுக்கு முதன்முறையாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி, இணையமைச்சர் டாக்டர் முஞ்பரா மகேந்திரபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்தியப்பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சிறுவன் அவி சர்மாவுடன் கலந்துரையாடிய பிரதமர், ராமாயணத்தின் பல்வேறு அம்சங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தியிருப்பதன் ரகசியம் பற்றி கேட்டார். முழு ஊரடங்கின்போது ராமாயணம் தொடரை ஒளிபரப்புவது என்ற முடிவால் தாம் ஊக்கம் பெற்றதாக அவி சர்மா கூறினார். அவரது படைப்பில் சில பாடல் வரிகளையும் பாடினார். செல்வி உமாபாரதி குழந்தையாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் அவரது ஆழமான ஆன்மீகத்தையும், அறிவுத்திறனையும் வெளிப்படுத்தியதைப் பிரதமர் அப்போது எடுத்துரைத்தார். மத்தியப்பிரதேச மண்ணில் வயதுக்கு மீறிய திறனை அளிப்பதற்கான ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவர் கூறினார். மிகச் சிறியவர்களும், பெரிய செயல்களை செய்யலாம் என்பதற்கு அவர் ஓர் உதாரணமாகவும், உந்து சக்தியாகவும் இருப்பதாக அவியிடம் பிரதமர் கூறினார்.
கர்நாடகாவைச் சேர்ந்த செல்வி ரிமோனா எவடே பெரிராவுடன் உரையாடிய பிரதமர், இந்திய நடனத்தில் அவரது ஆர்வம் குறித்து விவாதித்தார். இந்த ஆர்வத்தைத் தொடரும்போது எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றியும் அவர் கேட்டறிந்தார். தமது மகளின் கனவுகள் நிறைவேற சொந்த நலன்களை மறந்த அவரது தாயாரை பிரதமர் பாராட்டினார். ரிமோனாவின் சாதனைகள் அவரது வயதை விட மிகவும் பெரியவை என்று கூறிய பிரதமர், இந்த மகத்தான தேசத்தின் பலத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாக இந்தக் கலை உள்ளது என்று அவரிடம் தெரிவித்தார்.
திரிபுராவை சேர்ந்த செல்வி புகாபி சக்கரவர்த்தியுடன் உரையாடிய பிரதமர், கொவிட் தொடர்பான அவரின் புதிய கண்டுபிடிப்பு பற்றி விசாரித்தார். விளையாட்டு வீரர்களுக்கான தமது உடல் தகுதி செயலி பற்றி பிரதமரிடம் அவர் எடுத்துரைத்தார். இந்த முயற்சியில் பள்ளி, நண்பர்கள், பெற்றோர்களிடமிருந்து அவர் பெற்ற ஆதரவு பற்றி பிரதமர் வினவினார். விளையாட்டுக்களுக்கும் அதே சமயம் புதிய செயலி உருவாக்கத்திற்கும் அவரது நேரத்தை சமமாக பகிர்ந்தது பற்றியும் பிரதமர் கேட்டறிந்தார்.
பீகார் மாநிலத்தின் மேற்கு சம்ப்ரானைச் சேர்ந்த சிறுவன் திராஜ் குமாருடன் உரையாடிய பிரதமர், முதலைத் தாக்குதலிலிருந்து இளைய சகோதரரைக் காப்பாற்றிய சம்பவம் பற்றி அவரிடம் கேட்டறிந்தார். இளைய சகோதரரைக் காப்பாற்றிய போதும் இப்போது புகழ் பெற்றுள்ள போதும் அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பது பற்றியும் பிரதமர் கேட்டார். அந்த சிறுவனின் துணிச்சலையும், சமயோசித அறிவையும் பிரதமர் பாராட்டினார். ஒரு ராணுவ வீரராக நாட்டிற்கு சேவை செய்ய தாம் விரும்புவதாக பிரதமரிடம் திராஜ் கூறினார்.
பஞ்சாபை சேர்ந்த சிறுவன் மீதான்ஷ் குமார் குப்தாவுடன் உரையாடிய பிரதமர், கொவிட் பிரச்சனைகளுக்கான செயலியை உருவாக்கி சாதனைப் படைத்தது பற்றி பிரதமர் விசாரித்தார். தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான அரசியல் முயற்சிகள் பயன் தந்துள்ளதையும் வேலை தேடுவோர் என்பதற்கு மாறாக வேலை தருவோராக மாறியிருப்பதையும் மீதான்ஷ் போன்ற இளையோர்களிடம் காண்பதாக பிரதமர் கூறினார்.
சண்டிகரைச் சேர்ந்த செல்வி தாருஷி கவுருடன் உரையாடிய பிரதமர், விளையாட்டுக்கும், படிப்புக்கும் இடையே சமச்சீராக இருப்பது பற்றி கருத்து கேட்டார். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமை முன்மாதிரியாக தாருஷி எடுத்துக் கொண்டது ஏன்? என்று பிரதமர் வினவினார். அவரது சிறப்பான செயல்பாடும் விளையாட்டு வீராங்கனையாகவும், ஒரு தாயாகவும் சமநிலையில் இருந்தது ஆகியவையே அவர் மீதான ஈர்ப்புக்கு காரணம் என்று பிரதமரிடம் தாருஷி கூறினார். விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து வசதிகள் கிடைப்பதற்கும் எந்த நிலையிலும் வெல்வதற்கான மனநிலையை உருவாக்குவதற்கும் அரசு உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.
கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா கொண்டாடும் முக்கியமான தருணத்தில் இவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றார். கடந்த காலத்திலிருந்து வலிமையைப் பெற்று அமிர்த காலமான வரும் 25 ஆண்டுகளில் மகத்தான விளைவுகளை உருவாக்க அர்ப்பணிப்பதற்கான தருணம் இது என்று அவர் கூறினார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று நாட்டின் புதல்விகளையும் அவர் பாராட்டினார். விடுதலைப் போராட்டத்தின் புகழ் மிக்க வரலாற்றையும் பீர்பால கனக்லதா பருவா, குதிராம் போஸ், ராணி கைடிநீலு ஆகியோரின் பங்களிப்பையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். "இளம் வயதிலேயே இந்த வீரர்கள் நாட்டின் சுதந்திரத்திற்கான இயக்கத்தில் ஈடுபட்டு அதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது ஜம்மு-காஷ்மீரின் நவ்ஷேரா பகுதிக்குப் பயணம் செய்ததையும் சுதந்திரத்திற்குப் பிந்தைய போரின் போது சிறார் வீரர்களாக பங்களிப்பு செய்த பல்தேவ் சிங், பசந்த் சிங் ஆகியோரை சந்தித்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். தங்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் அந்த இளம் வயது ராணுவத்திற்கு அவர்கள் உதவி செய்தனர். இந்த நாயகர்களின் வீரத்திற்குப் பிரதமர் புகழாரம் சூட்டினார்.
குரு கோவிந்த் சிங் அவர்களின் புதல்வர்கள் கொண்டிருந்த வீரத்தையும், செய்த தியாகத்தையும் உதாரணங்களாக பிரதமர் சுட்டிக்காட்டினார். மிகுந்த துணிச்சலுடன் இந்தப் புதல்வர்கள் தியாகம் செய்தபோது அவர்களின் வயது மிகவும் இளையது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் நாகரீகம், கலாச்சாரம், ஆன்மீகம், சமயத்திற்கு அவர்களின் தியாகம் ஒப்பில்லாதது. இந்தப் புதல்வர்கள் மற்றும் அவர்களின் தியாகம் குறித்து கூடுதலாக அறிந்து கொள்ளுமாறு இளைஞர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
தில்லியில் இந்தியாவின் நுழைவாயில் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போசின் டிஜிட்டல் வடிவிலான உருவச்சிலை அமைக்கப்பட்டிருப்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். "தேசத்திற்கான கடமை என்பதில் நேதாஜியிடமிருந்து மிகப் பெரும் ஊக்கத்தை நாம் பெற்றிருக்கிறோம். நேதாஜியிடமிருந்து இந்த ஊக்கத்தை எடுத்துக் கொண்டு நாட்டின் கடமைப் பாதையில் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்" என்று மோடி கூறினார்.
எந்தத் துறையும், கொள்கைகளும், முன்முயற்சிகளும் இளைஞர்களை மையப்படுத்தி உள்ளன என்று பிரதமர் கூறினார். தொடங்குக இந்தியா, நிமிர்ந்து நில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் உற்பத்தி ஆகியவற்றுடன் தற்சார்பு இந்தியாவின் மக்கள் இயக்கம் நவீன கட்டமைப்புகள் உருவாக்கம் போன்ற முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் புதிய சகாப்தத்தில் தலைமை தாங்குவதற்கு இந்திய இளைஞர்களின் வேகம் பொருத்தமாக உள்ளது. புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொழில்கள் துறையில் இந்தியாவின் சக்தி அதிகரித்து வருவதை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு இந்தியாவின் இளம் தலைமை நிர்வாகிகள் பொறுப்பேற்றிருக்கும் நாட்டின் பெருமிதத்தை அவர் எடுத்துரைத்தார். "இன்று புதிய தொழில்கள் உலகத்தில் இந்தியாவின் இளைஞர்கள் சிறந்து விளங்குவதைக் காணும் போது நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவின் இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதால் நாம் பெருமிதம் கொள்கிறோம் என்று பிரதமர் கூறினார்.
நாட்டின் புதல்விகள் முற்காலத்தில் அனுமதிக்கப்படாத துறைகளிலும் கூட இன்று சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்று பிரதமர் கூறினார். புதிய கண்டுபிடிப்பிலிருந்து பின்வாங்காத புதிய இந்தியா இது. துணிவும், உறுதியும் இன்றைய இந்தியாவின் அடையாளங்களாகும்.
தடுப்பூசித் திட்டத்தில் இந்திய இளையோர்கள் தங்களின் நவீன, அறிவியல் ஆர்வத்தைக் காண்பித்திருப்பதற்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். ஜனவரி 3-லிருந்து வெறும் 20 நாட்களில் 40 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தில் இவர்களின் தலைமைத்துவத்திற்காகவும் அவர் பாராட்டினார். உள்ளூர் பொருட்களை ஆதரிக்கும் தூதர்களாக இருக்குமாறும், தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறும் அவர்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.