ஜெய்பூரில் பெட்ரோ ரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தை பிரதமர் திறந்து வைத்தார்
ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
"பெருந்தொற்றின்போது தனது வலிமை, தற்சார்பை அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது" - பிரதமர் மோடி பெருமிதம்.
ஜெய்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தௌசா ஆகிய மாவட்டங்களில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சிபெட் நிறுவனத்திற்காக ராஜஸ்தான் மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு ராஜஸ்தானில் 23 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், இவற்றில் 7 மருத்துவக் கல்லூரிகள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நூறு ஆண்டுகளின் மிகப்பெரிய பெருந்தொற்று, உலகளவில் மருத்துவத்துறைக்கு பாடத்தைக் கற்றுத் தந்திருப்பதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு நாடும் தங்களது பாணியில் இந்த நெருக்கடியை சமாளித்து வருகின்றன. இந்தப் பேரிடரில், தனது வலிமை, தற்சார்பை அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.
குஜராத் முதலமைச்சராக தாம் பணியாற்றியபோது மருத்துவத்துறையின் குறைபாடுகளைப் புரிந்து கொண்டதாகவும், பிரதமராக அவற்றை நீக்குவதற்கு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். "நாட்டின் சுகாதாரத் துறையை மாற்றி அமைப்பதற்காக, தேசிய அணுகுமுறை மற்றும் தேசிய சுகாதார கொள்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். தூய்மை இந்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் மற்றும் தற்போது ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் வரையில் ஏராளமான முயற்சிகள் இந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்", என்று அவர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் சுமார் மூன்றரை லட்சம் மக்கள் இலவச சிகிச்சைகளைப் பெற்றதாகவும், 2.500 சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் இங்கு தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மருத்துவக் கல்லூரிகள் அல்லது சிறப்பு மருத்துவமனைகள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் தங்களது சேவையை விரைவாக வழங்குவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். "6 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருந்து 22க்கும் அதிகமான எய்ம்ஸ் மருத்துவமனைகளுடன் வலுவான இணைப்பை இந்தியா பெற்றிருப்பதாக இன்று நாம் பெருமையுடன் கூறலாம்", என்றார் அவர்.
கடந்த 6-7 ஆண்டுகளில் 170 க்கும் அதிகமான புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், சுமார் 100 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்றும் பிரதமர் கூறினார். கடந்த 2014-ஆம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடம் 82,000 ஆக இருந்தது. இன்று, இந்த எண்ணிக்கை 1,40,000 ஆக உயர்ந்துள்ளது. ஒழுங்குமுறை மற்றும் ஆளுகை துறையிலும் தேசிய மருத்துவ ஆணையம் தொடங்கப்பட்டது முதல் கடந்த கால பிரச்சினைகள் மற்றும் கேள்விகளுக்கு விடை கிடைத்திருப்பதாக பிரதமர் கூறினார்.
மருத்துவ சேவையுடன் இணைந்த திறன் கொண்ட மனிதசக்தி தரமான மருத்துவ சேவைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். இது, கொரோனா காலகட்டத்தில் தெளிவாக உணரப்பட்டது. 'இலவச தடுப்பூசி, அனைவருக்கும் தடுப்பூசி' என்ற மத்திய அரசு திட்டத்தின் வெற்றி, இதன் பிரதிபலிப்பாகும். இன்று 88 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ காலகட்டத்தில், அதிக அளவிலான திறன், இந்தியாவிற்கு வலு சேர்ப்பது மட்டுமல்லாமல், தற்சார்பு இந்தியாவை அடையவும் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் கூறினார். பெட்ரோ- ரசாயன தொழில் போன்ற விரைவான வளர்ச்சியை அடைந்து வரும் தொழில்துறைகளுக்கு திறன்வாய்ந்த மனித ஆற்றல் காலத்தின் கட்டாயமாக உள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனம், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது எரிசக்தி பல்கலைக்கழகமாக இயங்கும் பண்டித தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக் கழகத்தை தாம் முதலமைச்சராக இருந்த காலத்தில் உருவாக்கி அதனை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை அவர் நினைவுகூர்ந்தார். தூய்மையான எரிசக்தி கொண்ட புதிய கண்டுபிடிப்புகளை இளைஞர்கள் உருவாக்குவதற்கு இது போன்ற நிறுவனங்கள் அவர்களுக்கு பாதைகளை அமைத்துத் தரும் என்று அவர் கூறினார்.
பார்மரில் உள்ள ராஜஸ்தான் சுத்திகரிப்பு திட்டம் ரூ.70,000 கோடி முதலீட்டுடன் விரைவான வளர்ச்சியை அடைந்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். மாநிலத்தின் நகர எரிவாயு விநியோகம் குறித்து பேசிய அவர் 2014-ஆம் ஆண்டு வரை, நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு ஒரு நகருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது 17 மாவட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழாய் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். கழிவறைகள், மின்சாரம், எரிவாயு இணைப்புகள் போன்றவை வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக எளிமையான வாழ்க்கை ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். ஜல் ஜீவன் இயக்கத்தின் வாயிலாக ராஜஸ்தானில் சுமார் 21 லட்சம் குடும்பங்கள் குடிநீர் குழாய் இணைப்புகளைப் பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார். ராஜஸ்தானின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதாக அவர் கூறினார். மேலும், இந்த மாநிலத்தில் ஏழை குடும்பங்களுக்கு 13 லட்சத்திற்கும் அதிகமான நிரந்தர வீடுகள் கட்டித்தரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.