இனி வங்கிகளில் பணம் எடுக்கவும், செலுத்தவும் பான் கார்டு கட்டாயம்
வங்கிகள், தபால் அலுவலகங்களில் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ பான் கார்டு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது
தற்போது வங்கிகளில் ஒரு நாளில் 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கும் மேல் பணம் டெபாசிட் செய்தால் பான் எண் கட்டாயம் என்கிற விதி உள்ளது. ஆனால் பணம் எடுப்பதற்கு இதுபோன்று பான் கார்டு தேவையில்லை என்பதுடன், இதற்கு வரம்பும் எதுவும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது வங்கியில் பணம் போடவும், எடுக்கவும் புதிய விதிமுறைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய விதிகள் இம்மாதம் 26ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.இந்த புதிய விதிகளின்படி,
ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ. 20 லட்சத்திற்கும் மேல் பணம் எடுத்தாலும், போட்டாலும், பான் அல்லது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
இதன்மூலம் ஒரு தனிநபர் ஒரு நிதியாண்டில் மொத்தம் எவ்வளவு பணப் பரிவர்த்தனை செய்கிறார், அதற்கு முறையாக வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
அதேபோல், வங்கி, தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் நடப்பு கணக்கு தொடங்கவோ, ரொக்க கடன் கணக்கு தொடங்கவோ பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.