பாஜகவுக்காக பிரசாரம் செய்வேன்: கன்னட நடிகர் சுதீப்
கன்னட நடிகர் கிச்சா சுதீப் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், முதல்வர் பொம்மை மீதான அபிமானத்தால் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வேன் என்று கூறினார்;
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் கிச்சா சுதீப், பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கன்னட நட்சத்திரம் பாஜகவில் சேருவார் என்ற தகவல் பரவியது.
இந்நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சுதீப் கூறியதாவது: “நான் பிரச்சாரம் செய்வேன், தேர்தலில் போட்டியிட மாட்டேன் ” என்று தெரிவித்தார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுதீப், முதல்வர் பொம்மையுடன் தனக்கு ஆழ்ந்த தனிப்பட்ட பந்தம் இருப்பதாகவும், முதல்வர் மீது கொண்ட மரியாதை மற்றும் அபிமானத்திற்காக பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார்.
முதல்வர் பொம்மை தனது வாழ்க்கையில் பலமுறை தனிப்பட்ட அளவில் தனக்கு உதவி செய்துள்ளார் என்று கூறிய அவர், நான் எனது நன்றியை இவ்வாறு செலுத்துகிறேன். இது கட்சியைப் பற்றியது அல்ல. என் வாழ்நாள் முழுவதும் என்னை ஆதரித்தவர்கள் பலர் உள்ளனர், அவர்களில் ஒருவர் முதல்வர் பொம்மை. இன்று நான் அவருக்காகத்தான் இருக்கிறேன், கட்சிக்காக அல்ல என்று கூறினார்.
சுதீப், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று முதல்வரிடம் கூறியதாகத் தெரிவித்தார். அவர் நலனுக்காகவே பாஜகவுக்காக பிரசாரம் செய்ய வந்துள்ளேன் என்று அவரிடம் கூறியுள்ளேன் என்றார்